d
 
காஞ்சிபுரம் அருகேயுள்ள வேடல் பகுதியில் தே.மு.தி.க. சார்பில் அரசியல் திருப்புமுனை மாநாடு இன்று மாலை தொடங்கியது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகின்றன.   கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
தே.மு.தி.க.வைப்பொறுத்தவரை அந்தக் கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்க்க தி.மு.க., பா.ஜனதா மற்றும் மக்கள் நல கூட்டணி ஆகியவை முயற்சி செய்து வருகின்றன.  ஆனால் எந்த கட்சியிடமும் தனது எண்ணத்தை விஜயகாந்த் வெளிப்படுத்த வில்லை.
இந்த நிலையில்  தே.மு.தி.க, அரசியல் திருப்புமுனை மாநாடு இன்று நடந்துவருகிறது.
காஞ்சிபுரம் வேடல் பகுதியில் பகுதியில் இந்த மாநாடு நடந்துவருகிறது.   300 அடி அகலத்தில் 40 அடி நீளத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு “அண்ணா அரங்கம்” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில், மாலை ஆறு மணி அளவில் மாநாடு தொடங்கியது. வரவேற்புரையைத் தொடர்ந்து நட்சத்திர பேச்சாளர்கள் உரையாற்றினர்.
தற்போது அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசி வருகிறார்.
“என் மூத்த பையன் நடிக்கிறான்…  சின்னவன் படிக்கிறான்..  என் மனைவி பிரேமலதா.. “ என்றெல்லாம் பேசி எதையோ கூறவந்தார். பிறகு திசை மாறி அரசியல் பக்கம் வந்தார்.
“காவல்துறையை வைத்து அனைவரையும் மிரட்டி வருகிறது அ.தி.மு.க. அது ஒரு   ஊழல் கட்சி. உடன் குடியில் 8000 கோடிக்கு மின் திட்டம் போட்டாங்க. அதிலும் ஊழல்..
ஓ… பன்னீர் செல்வம் இருக்கும் வரை அ.தி.மு.கவும் உருப்படாது, இந்த நாடும் உருப்படாது. ஓ என்பது என்ன சைபர்..! சைபர் என்பது என்ன,  ஜீரோ..!  ஜீரோ வாங்கினா பள்ளிக்கூடத்துல கோழி முட்டை வாங்கினதாத்தானே சொல்வங்க…? பிறகு எப்படி உருப்படும்?
ஜெயலலிதாவுக்கு தெனாவெட்டு திமிரு… ” என்று பேசினார்.
பிறகு, “வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட அ.தி.மு.க. தயாரா” என்று கேட்டார்.
மேலும், “ எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்த விஜயகாந்த்,  தற்போது தொடர்ந்து பேசி வருகிறார்.