145213911118930 (1)
(கடந்த 9ம் தேதி வெளியான பேட்டி. மறு பிரசுரம் செய்யப்படுகிறது.)
தைப்பூசத் திருநாளுக்கு, அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கூறினார். இன்று, முதல்வர் ஜெயலலிதா, “மதுரை திருமலை நாயக்கர் பிறந்த நாளான தைப்பூசத் திருநாள் அன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசு விழாவாக மதுரையில் கொண்டாடப்படும்” என்று அறிவித்திருக்கிறார். இதையடுத்து வரும் 25ம் தேதி விழா கொண்டாட அரசு தரப்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கத் துவங்கியிருக்கின்றன.
“வந்தேறியான தெலுங்கு மன்னன் திருமலை நாயக்கர், தமிழர்களை அடிமைப்படுத்தியவர்.அவர் கட்டிய திருமலை நாயக்கர் மகாலை இடித்துத்தள்ள வேண்டும்” என்று பேசி வருபவர்,சீமான்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் “திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா” அறிவிப்பை அடுத்து சீமான் தரப்பினர் கொதிப்பில் இருப்பதாக தகவல் பரவ.. நாம் சீமானிடம் பேசினோம்.
எப்போதுமே அதிரடி சரவெடியான சீமான், இன்னும் ஆக்ரோஷமாக பொங்கிவிட்டார்.
இதோ நமது patrikai.com இதழுக்கு சீமான் அளித்த பேட்டி..
திருமலைநாயக்கர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழர் கடவுளான முப்பாட்டன் முருகனுக்கு கொண்டாடப்படும் தை பூசத்தை ஒவ்வொரு ஆண்டும் பெருவிழாவாக தொடர்ந்துதமிழர்கள் கொண்டாடி வருகிறோம். உலகிலுள்ள 13 கோடி தமிழர்கள் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் பிற மொழி தினங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோலதமிழர்களின் முக்கிய திருவிழாவான தைப்பூசம் வரும், ஜனவரி 25–ந்தேதி அரசு விடுமுறைநாளாக அரசு அறிவிக்க வேண்டும் என்று நேற்றுதான் அறிவித்தேன். இன்று ஜெயலலிதா, தைப்பூசம் பற்றி கூறாமல், தெலுங்கு மன்னன் திருமலை நாயக்கர் பிறந்தநாளாக தைப்பூசம் கொண்டாடப்படும். அதுவும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கிறார்.

தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை என்கிற உங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தீர்களே…
இனி, தி.மு.க மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளையும் ஒழிக்கும் போராட்டத்தைத்தான் தீவிரமாக நடத்தப்போகிறோம். தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படும் அந்த இரு கட்சிகளையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட்டால், தனிப்போராட்டங்கள் தேவைப்படாது.

திருமலை நாயக்கர் விழா கொண்டாடுவதால், ஜெயலலிதாவை எதிர்க்கிறீர்கள். இதில் ஏன் கருணாநிதியும் இழுக்கிறீர்கள்..?
கருணாநிதி மட்டும் என்ன.ஒழுங்கா? அவரது ஆட்சிக்காலத்தில் எங்கள் குலத்தைச் சேர்ந்த பூலித்தேவனுக்கா மண்படம் எழுப்பினார்.. கட்டபொம்ம நாயக்கனுக்குத்தானே மரியாதை செய்தார்.. ஆகவேதான் சொல்கிறேன்.. தமிழர் விரோத கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. இரண்டையும் ஒழிப்பதுதான் எங்கள் வேலை!

மதுரை பகுதியில் கலவர சூழல் நிலவிய காகாலத்தில்தான நாயக்க மன்னர்கள் வந்து அமைதியை ஏற்படுத்தினார்கள். மற்றபடி, நாடு பிடிக்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறதே. தவிர, “திருமலைநாயக்கர் பண்பாட்டுக்கும் மரபுக்கும் மதிப்பளித்தவர். மதுரை மாநகரை விழா நகரமாகவும், கலைநகரமாகவும் மாற்றியமைத்தவர்” என்று ஜெயலலிதாவும் புகழ்ந்திருக்கிறாரே..

திருமலை நாயக்கர் பற்றியஇப்படிச் சொல்வது தவறு. நாட்டைப் பிடிக்கத்தான் அவன் வந்தான். பிடித்தவுடன், என் இன மக்களின் நிலங்களை எல்லாம்அபகரித்துக்கொண்டான். தமிழ்மக்களை அடிமைப்படுத்தினான். அவமானப்படுத்தினார். ஆம்.. தமிழ் பேசினால் நாக்கை அறுத்தான். அப்படிப்பட்டவன்… தெலுங்கு வந்தேறி.. நல்லவனா? தமிழ் சமூகத்தின் மீது பார்ப்பனீய ஆதிக்கத்தை ஏவியவன்.சாதியைத் திணித்து மக்களைப் பிரித்தவன். தமிழருக்கு எதிரான தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளை தமிழர் மீது திணித்தவன்.
பழனி கோயிலை தமிழ் பண்டாரங்களிடமிருந்து பிடுங்கி, பார்ப்பனர்களுக்கு அளித்தவன். அவனுக்கு பிறந்தநாள் விழா..அதுவும் அரசே கொண்டாடுவதா..?

ஆனாலும் நடத்தட்டும். இன்னும் எத்தனை வருடத்துக்கு இவர்முதல்வராக இருந்துவிடப்போகிறார்.?
தேர்தல் நெருங்கும் நிலையில் வந்திருக்கும் இந்த அறிவிப்பால் பின்னால் வாக்கு அரசியல் நோக்கம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

இருக்கலாம். தெலுங்கு நாயக்கர்கள் ஓட்டுக்கள் ஜெயலலிதாவுக்கே கிடைக்கட்டும். மானமுள்ள தமிழன் ஓட்டு எங்களுக்குகிடைத்தால் போதும்!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறதே..?

நாம் தமிழர் கட்சி ஆட்சியமைத்தால் இந்த பிரச்சினைக்குநிரந்தர தீர்வு ஏற்படும்.

தேர்தலுக்கு எந்த வகையில் தயாராகி வருகிறீர்கள்? வரும் தேர்தலில் யாருடன் கூட்டணிவைக்கப்போகிறீர்கள்?

திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.தனித்தே களம் இறங்குவது என்று தீர்மானித்திருக்கிறோம். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து தொகுதி வேட்பாளர்களையும் அறிவிப்போம்.

வரும் 24ம் தேதி திருச்சியில் உங்கள் கட்சியின் மாநாட்டை நடத்துகிறீர்கள். அப்போது முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வருமா?

தேர்தலுக்காக மட்டுமில்லை.அதையும் தாண்டி தமிழரின் நலன் குறித்து சிந்திக்கிறோம்.செயல்படுகிறோம். தமிழகத்தில் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பிளவுபட்டு கிடக்கும் தமிழர்களை, நாம் தமிழராக ஒன்றிணைப்பதே எங்கள் கட்சியின் நோக்கம். இதனை மெய்ப்பிக்கும் வகையில்தான் மாநாடு நடத்துகிறோம்.
சாதி, மதங்களை கடந்து அனைத்து தமிழர்களும் மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். மாநாட்டில் முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பொறுத்திருந்து பாருங்கள்!

பேட்டி: டி.வி.எஸ். சோமு