IMG_20160113_015003
தி.மு.க. தலைவர் கருணாநிதியை பேட்டி எடுப்பதுபோலத்தான், “திராவிட இயக்க தமிழர் பேரவை” தலைவர் சுப.வீரபாண்டியனை பேட்டி காண்பதும்.  சொல்லப்போனால்  தி.மு.கவுக்கு ஆதரவாக, கருணாநிதியைவிட கூடுதலான வாதங்களை வைப்பவர் சுப.வீ.
இவர், “தி.இ.த.பே.” அமைப்பை துவங்கியபோது, “இது தி.மு.கவின் கிளைக்கழகம் போல் செயல்படுமோ” என்று கிண்டலாக ஒரு கேள்வி வந்து விழ…  கொஞ்சமும் தயங்காமல் சுப.வீ. சொன்னார்: “ கிளைக்கழகம் போல் அல்ல.. கிளைக் கழகமே தான்!”
அப்படிப்பட்ட சுப.வீயிடம்,patrikai.com  இதழுக்காக ஒரு பேட்டி. தேர்தல் பிரச்சாரத்துக்கான திட்டமிடல், இடையே வெளிநாட்டு பயணத்துக்கான ஏற்பாடு, கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி… இவற்றுக்கு நடுவே நமக்கும் நேரம் ஒதுக்கினார்.
வழக்கம்போலவே, கேள்விகளை கவனமாக உள்வாங்கி, தனது கருத்துக்களை ஆணித்தரமாக வெளிப்படுத்தினார்.
இதோ சுப.வீ. நமக்களித்த பேட்டி..
தன்னையும் தனது கட்சியையும் கடுமையாக விமர்சிக்கும் விஜயாந்த்  கிண்டலடிக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை கூட்டணிக்கு அழைக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. மூத்த தலைவருக்கு, பாரம்பரியம் மிக்க கட்சிக்கு இது அழகா என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே..!
தேர்தல் நேரங்களில் மற்ற கட்சிகளுக்கு யார் அழைப்பு விடுப்பது என்பதில் கவுரவம் பார்க்கத் தேவையில்லை.  யாரை வீழ்த்த நினைக்கிறோமோ, அதற்காக வலுவான கட்சிகளை இணைக்கும் முயற்சிதான் இந்த அழைப்புகள்.
1967ல் காங்கிரஸ் என்ற எதிரியை வீழ்த்த முடிவெடுத்தார் அண்ணா. எதிரெதிர் துருவமாக செயல்பட்ட சுதந்திரா கட்சியுடனும், இடதுசாரி கட்சிகளுடனும் பேசினார்.. கூட்டணி வைத்தார்.அப்போது அவர், “எதிரியை வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, எந்தத் தடியை எடுத்து அடித்தால் என்ன” என்று கேட்டார்.
இன்னொரு செய்தியை வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். “கூட்டணி கூட்டணி”  என்று சொல்கிறோமே தவிர, இங்கு  இருப்பதெல்லாம் வெறும்  தொகுதி உடன்பாடுதான்!  கூட்டணி என்பதற்கு குறைந்தபட்ச செயல்திட்டம் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பது, “இந்த தொகுதியில நீ நிக்காதே.. அந்த தொகுதியில நான் நிக்கலை” என்கிற தொகுதி உடன்பாடுதான்.
இதில் பெரிய கவுரவம் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.  என்று கருதி பெருந்தன்மையோடு தலைவர் கலைஞர் அழைத்திருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
காங்கிரஸ் என்கிற எதிரியை வீழ்த்த, பலரையும் கூட்டு சேர்த்தார் அண்ணா என்றீர்கள். உண்மைதான். அப்படி தி.மு.கவால் எதிரியாக பார்க்கப்பட்ட காங்கிரஸ் உடனும் கருணாநிதி கூட்டணி வைத்திருக்கிறாரே?
கால மாற்றங்களில் அரசியலில் எதிரெதிரான தன்மை உடையவர்கள்  ஓரணியில் சேர்வது நடக்கவே செய்யும்.  அண்ணா இருந்தபோது, அ.தி.மு.க. என்று  தன் பெயரிலேயே வரும் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.
தவிர, காங்கிரஸை ஒழிப்பதுதான் என் வேலை என்று சொல்லித்தான் 1925ம் ஆண்டு மாநாட்டில் அறிவித்து பிரிந்தார் பெரியார். ஆனால் அதே காங்கிரஸை 1957ம் ஆண்டு தேர்தலில் முழுமையாக ஆதரித்தார்.  இதுதான் காலத்தின் மாற்றம்.
நானும் கூட காங்கிரஸ் கட்சியை உடன்பாடான இயக்கமாக பார்க்கவில்லை.  ஆனால் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டணி சேரலாம் என்று நினைக்கிறேன். இது இந்திய அளவிலான சூழல்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, , அ.திமுக என்கிற.. ஒரு “கட்சியில்லாத கட்சியை” வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டு சேர்வது தவறில்லை.
12544768_10153379071583581_17715562_o (1)
பா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதில் தவறில்லை என்றீர்கள். ஆனால் அந்த பா.ஜ.கவுடனும், தி.மு.க. கூட்டணி வைத்திருந்திருக்கிறதே!
அந்த நேரத்தில் ஆட்சியைக் காப்பாற்ற நாங்கள் அப்படி செய்தோம். ஆனாலும்  திமுக  வரலாற்றில் அந்த நிகழ்வு ஒரு கறைதான். இதை நான் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறேன்.
பொடா சிறையில் இருந்து நான் வந்தபோது தலைவர் கலைஞரிடம், “நான் பொடாவில் இருந்து வெளியே வந்ததைவிட, நீங்கள்  பா.ஜ.கவிடம்   இருந்து வெளியேவந்ததே எனக்கு மகிழ்ச்சி” என்றேன்.
இப்போதும் அந்த கருத்தில் எனக்கு மாற்றம் இல்லை.
இப்போது கூட தி.மு.க. – பா.ஜ.க. – தே.மு.தி.க கூட்டணி உருவாக ஒரு வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. அப்படி பா.ஜ.கவுடன்  தி.மு.க. கூட்டணி வைத்தால் உங்களது பிரச்சார வியூகம் எப்படி இருக்கும்?
அப்படி நடக்கும் என்று நான் நம்பவில்லை.  (சிரிக்கிறார்) முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்… பிறகு நான் எப்படி அழைப்பது என்று சொல்கிறேன்..!
திமுவின் முதல்வர் வேட்பாளர் என்று  உங்கள் பிரச்சாரத்தில் யாரைக் குறிப்பிட்டு பேசப்போகிறீர்கள்…  கருணாநிதியையா, ஸ்டாலினையா?
அதை முடிவு செய்யும் இடத்தில் நான் இல்லை.  திமுகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும்.  தேர்ந்தெடுக்கப்படுகிற சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்ய வேண்டும். 
தவிர, முதல்வர் வேட்பாளர், , பிரதமர் வேட்பாளர் என்பதே நம் நாடாளுமன்ற முறைமைகளுக்கு முரண்பட்டது. இங்கு அதற்கு இடமே இல்லை.  மோடிதான் அப்படி முதன் முதலாக பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்..
இலக்கணத்தில் ஒன்று சொல்வோம்.  ஒரு தவறு நடந்தால் அதை வழு என்பார்கள்.  அதாவது குற்றம். அதே தவறை எல்லோரும் செய்துவிட்டால் வழு அமைதி என்று சொல்லிவிடுவோம்.. அதே மாதிரிதான், முதல்வர் வேட்பாளர் என்பதும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்பதற்கு முக்கிய மூன்று காரணங்களாக நீங்கள் நினைப்பது எவற்றை?
அதிகாரம் ஒரே ஒரு மனிதரிடம் குவிந்து கிடக்கிறது. எந்த இடத்தில்  அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடம் செயலற்றுக் கிடக்கிறது.  அதோடு,  இந்த அரசின் அறிவிப்புகள் எல்லாமே வெற்று அறிவிப்புகளே.   110ம் விதியின் கீ்ழ் 236 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதில் பத்து கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது ஏமாற்றுதானே!
ஆகவே அதிகார குவிப்பு, செயலற்றதன்மை, வெற்று அறிவிப்புகள் ஆகியவைதான்  இந்த அரசின் மீதான மிக முக்கிய குற்றச்சாட்டுகளாக வைக்கிறேன்.
பேட்டி: டி.வி.எஸ். சோமு, படங்கள்: கல்யான்
மு.க, ஸ்டாலின் சமூக வலைதளங்களில்  மிக அதிகமாக கிண்டல் செய்யப்படுவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
க்கள் நலக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?
திருமலை நாயக்கர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது பற்றி.. ?
மேலும் பல கேள்விகள்… சுப.வீயின் பதில்கள்.!  நாளை…