டிசிஎஸ் லக்னோ மூடப்படுகிறது

க்னோ

ந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் தனது லக்னோ கிளையை மூடப்போவதாக செய்திகள் வந்துள்ளன.

இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப துறை பின்னடைந்து வருவது தெரிந்ததே. ஏற்கனவே பல சிறு சிறு ஐடி கம்பெனிகள் மூடப்பட்டு வருகின்றன.  தற்போது மிகப்பெரிய நிறுவனமான டி சி எஸ் தனது லக்னோ கிளையை முழுவதுமாக மூடப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த தகவல் அவர்களின் குழுத்தலைமை மூலமாக ஜூலை 12ஆம் தேதி தெரிவிக்கப்பட்டதாக அந்த ஊழியர்கள் கூறுகின்றனர்.  நிறுவனம் இந்த நகரிலுள்ள தனது ப்ராஜக்டுகளை வேறு கிளைகளுக்கு சிறிது சிறிதாக மாற்றி இந்த வருட முடிவில் முழுமையாக இந்தக் கிளையின் பணிகளை முடித்துக் கொள்ளும் என அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இவர்கள் சந்தித்து முறையிட்டதாகவும்,  அவர் இந்தத் தகவலை பிரதமருக்கு தெரிவித்துள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கிறது.  இது தவிர மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கும் இது குறித்து தகவல்கள் அனுப்பியுள்ளனர்.   நிறுவனம் இது குறித்து எந்த அறிவிப்பும் இது வரை வெளியிடவில்லை.

டிசிஎஸ் தனது லக்னோ கிளையை 33 வருடங்களுக்கு முன்பு துவங்கியது.  500 பேருடன் துவங்கப்பட்ட இந்தக் கிளையில் ஊழியர்களாக 1700 பேரும், ஹவுஸ் கீப்பிங் மற்றும் காண்டிராக்ட் தொழிலாளர்களாக சுமார் ஐநூறு பேரும் பணி புரிகின்றனர்.

பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு அதிகாரி கூறியதாவது :  “இது தனியார் கம்பெனி.  இதை நடத்தச் சொல்ல அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.  அரசுத்துறை நஷ்டம் அடையும் தொழில்களை நடத்தலாம்,  ஆனால் எந்த தனியார் நிறுவனமும் நஷ்டம் தரும் எந்தத் தொழிலையும் தொடராது” எனக் கூறினார்

 


English Summary
Lucknow branch tcs is closing