டில்லி:

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலத்தில் நடந்த இந்த தாக்குதலுக்கு இந்தியர்கள் மதசார்பின்றி கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்தை ஓட்டிய சலீம் என்ற டிரைவர் தைரியமாக செயல்பட்டு 50 பேரை காப்பாற்றியுள்ளார்.

இதற்காக அவருக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘‘ காஷ்மீரியத் உணர்வு இன்னும் உயிருடன் இருக்கிறது. இதை நினைத்து பெருமைப்படுகிறேன்’’ என்று தெரிவித்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடு தான் தாக்குதலுக்கு காரணம் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால், இந்த தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி பலர் மத ரீதியான அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தாக வேண்டும் என்று இந்துத்வா அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. பாஜ பிரமுகரான ஜிவிஎல் நரசிம்ம ராவ் என்பவர் இது போன்ற வன்முறை தூண்டும் கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதேபோல் பஜ்ரங்தள் அமைப்பினரும் டிவி.க்களிலும், டுவிட்டர்களிலும் வன்முறையை தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அமர்நாத் யாத்ரீகர்கள், சிவ பக்தர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் என்று பேசி வருகின்றனர். மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் கண்டன கூட்டங்கள், பேரணிகளை பஜ்ரங்தள் நடத்தி வருகிறது. இதில் பள்ளி மாணவ மாணவிகள், இளைஞர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பங்கேற்க செய்து வருகுகிறது.

ஒரு வீடியோவில் பஜ்ரங்தள் அமைப்பினர் ஹரியானா மாநிலத்தில் ஒரு மசூதியில் இருந்து வெளியே வரும் ஒரு முஸ்லிம் மத குருவை ‘‘பாரத் மாதா கீ ஜே’’ ‘‘ வந்தே மாத்ரம்’’ என்று கோஷமிடுமாறு வற்புறுத்தி அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதேபோல் உ.பி.யில் சகாரன்பூர் பகுதியில் உள்ள மசூதியில் மத குருவை அடித்து உதைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

டிவி செய்தி சேனல்களில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாத நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது . ஹரியானா நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மத கலவரம் நடக்கும் சூழல் இருப்பதாக வியாபாரிகள் போலீசில் புகார் செய்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.