sasiperumal-vaiko

 

 

சென்னை:

“காந்தியவாதி சசிபெருமாள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலைதான் செய்யப்பட்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சசிபெருமாளின் மகன் விவேக், தனது தந்தையின் மரணம் குறித்து  நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து  தமிழக அரசு சார்பில் அரசு முதன்மை செயலாளர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் தாக்கல் செய்த பதில் மனுவில், சசி பெருமாள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தம்மையும் மனுதாரராக இணைத்து கொள்ளக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், செல்போன் டவரில் ஏறிய சசிபெருமாளை கீழே இறக்குவதற்காக தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் நைலான் கயிறை வீசினர். அது நழுவி, சசிபெருமாளின் கழுத்தில் விழுந்து  தொண்டை இறுகி அவர் இறந்தார் என்று தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் வைகோ அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சசிபெருமாள் மகன் விவேக் கேட்டுக் கொண்டதைப் போல, பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, இந்த மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.