இறுதிச்சுற்று மாதவன் - இயக்குநர் சுதா
இறுதிச்சுற்று மாதவன் – இயக்குநர் சுதா

 
சிலநாட்களக்கு முன் வெளியான  “இறுதிச்சுற்று” திரைப்படத்தில், கிறிஸ்துவர்களையும், கிறிஸ்துவ மதத்தையும் இழிவு படுத்தும் காட்சிகள் இருப்பதாக கூறி எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய  இந்திய தேசிய அப்போஸ்தல பேராயத்தின் தேசிய பேராயரும்,   நல்லிணக்க மாமனிதர்கள் இயக்கம் என்ற அமைப்பின் அமைப்பாளருமான பால் ஆர்.டி. மாறன், “படத்தில் நாயகியின் தந்தை, , “இனி நான் சாமிக்கண்ணு  கிடாயாது.. . சாமுவேல்’ என்று சொல்ல… ‘அடப்பாவி காசுக்கு மதம் மாறிட்டியா?’ என்று  அவரை மனைவியும் மகள்களும் துடைப்பத்தால் அடிக்கிறார்கள்.
இந்த காட்சி, மதம் மாறுகிறவர்களை… குறிப்பாக கிறிஸ்துவராக மாறுகிறவர்களை கொச்சைப்படுத்துகிறது. இந்த காட்சியை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் படத்தை தடை செய்யக்கோரி போராட்டத்தில் இறங்குவோம்” என்று நம்மிடம் தெரிவித்தார்.  அவரது கருத்தை  சற்று முன் வெளியிட்டிருந்தோம்.
இந்த விவகாரம் குறித்து, “இறுதிச் சுற்று” படத்தின் இயக்குநர் சுதா கொகாராவிடம் பேசினோம்:.
அவர், “கிறிஸ்தவ அங்கி அணிந்தவர், பணம் கொடுத்து மதம் மாறு என்று சொல்வதாக காட்சி அமைக்கவில்லை.  அப்படி அமைத்தால்தான், காசு கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்று அர்த்தமாகும்.
நான் அப்படி காட்சி அமைக்கவில்லை.  சாமிக்கண்ணு , ஒரு குடிகாரன். தான் மதம் மாறிவிட்டதாக அவன் சொல்கிறான். அதை மற்றவர்கள்தான்,  காசுக்காக மாறியதாய் நினைத்துக்கொள்கிறார்களே தவிர, இவன் அப்படிச் சொல்லவில்லை.
அந்த சாமிக்கண்ணு.  போங்கு கேரக்டர்.  தெளிவில்லாத மனநிலை உள்ளவன்.  அந்த கேரக்டர் பேசுவதை வைத்து ஒரு கருத்து சொல்வதாக நினைப்பது தவறு” என்றவர், “கிறிஸ்துவ மதத்தில்தான் தனக்கு ஆறுதல் கிடைப்பதாக அந்த கேரக்டர் நினைக்கலாம்.  கடைசியில், ஆண்டவரே என் மகளுக்கு உதவு என்று வேண்டுகிறாரே..  ஆக, கிறிஸ்துவ மத்ததை  உயர்வாகவே சொல்லியிருக்கிறேன்.
தவிர, சென்சாரில் அனுமதிக்கப்பட்ட காட்சிகள்தான் படத்தில் இருக்கின்றன. ஆகவே காட்சிகளை நீக்குவது தேவையில்லாதது!”  என்றார் உறுதியான குரலில்.
– டி.வி.எஸ். சோமு