விஜயகாந்த் - மோகன்ராஜ்
விஜயகாந்த் – மோகன்ராஜ்

 
சேலம் அழகாபுரம்  பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது  இஸ்மாயில்கான் ஏரி. சமீபத்தல் பெய்த பெரு மழையின் போது, இங்கே பெருமளவு நீர் தேங்கியது. சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்துக்கு மிக உதவியாக உள்ள ஏரி இது.
இந்த ஏரிப்பகுதியை. சட்டவிரோதமாக  ஆக்கிரமித்திருக்கிறார் என்று  தே.மு.தி.க.வைச் சேர்ந்த அழகாபுரம் எம்.எல் ஏ.வும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான மோகன்ராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
ஏரிக்குள் போராட்டம்
ஏரிக்குள் போராட்டம்

ஆக்கிரமிப்பட்டுள்ள ஏரி நிலத்தை மீட்க கோரியும், ஆக்கிரமித்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ மோகன்ராஜை கைது செய்ய வலியுறுத்தியும், ஏரியின் நடுவே, “தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம்” நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இயக்கத்தின் மாநிலதலைவர் தோழர் பூமொழி துணைப்பொதுச்செயலாளர் தோழர் ராஜி, சேலம் மாவட்டத்தலைவர் தோழர் மணி, மாவட்ட செயலாளர் தோழர் ஜெயபிரகாஷ், சேலம் மாநகரத்தலைவர் தோழர் ராமு உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத், பூமொழியை அலைபேசியில் தொடர்புகொண்டு, “விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதிமொழி கொடுத்தார். மேலும், ஆர்.டி.ஓ. தாசில்தார் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள், பொதுப்பணித்துறை மற்றும் , மாநகராட்சி அதிகாரிகளை ஏரிப்பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பினார்.
ஆர்.டி.ஓ.  விஜயபாபு உள்ளிட்டஅதிகாரிகள்  இஸ்மாயில்கான் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்தார்கள்.
பூமொழி
பூமொழி

 
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க தலைவர் பூமொழியிடம் பேசினோம்.
ஆவேசத்துடன் பேச ஆரம்பித்த அவர், “சேலம் மாவட்டத்தின் மூக்கிய நீர் ஆதாரங்களுள் இந்த இஸ்மாயில்கான் ஏரியும் ஒன்று.  இந்த ஏரிப்பகுதியில் 6 ஏக்கர் 89 செண்ட் நிலத்தை தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்த அழகாபுரம் எம்.எல்.ஏ. மோகன்ராஜ் ஆக்கிரமித்திருக்கிறார். போலியான ஆவணங்களைத் தயாரித்து இந்த சட்டவிரோத செயலை அவர் செய்திருக்கிறார்.
இது குறித்து, தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் கடந்த ஐந்தாண்டுகளாக தமிழக அரசிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் சென்னை உயர்நீதிமன்றத்திடமும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
ஏரியின் மண்,கருங்கல்,பனைமரம் ஆகியவவையும் திருடப்படுகிறது. இப்படி இயற்கையை கொள்ளையடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே  ஏரிக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்” என்றவர், “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஏதோ உத்தமர் போல தான் முதல்வரானால் நல்லாட்சி தருவோம் என்று வாய்கூசாமல் சொல்கிறார். ஆனால் அவரது கட்சி எம்.எல்.ஏ. அதுவும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்.. இப்படி சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்.
ஏரியை ஆட்டையைப்போட்டு ஏப்பம்விட்ட தனது கட்சி எம்.எல்.ஏ.வான அழகாபுரம் மோகன்ராஜ் முகத்தில், த்தூவென காறித்துப்ப துணிச்சல்  விஜகாந்துக்கு உண்டா….. என்று, அழகாபுரம் தொகுதி மக்கள் கேட்கிறாரக்ள். எனது கேள்வியும் அதுதான்!” என்று ஆவேசமாக சொல்லி முடித்தார் பூமொழி.
“தைரியத்துக்கு” பெயர் போன விஜயகாந்த்தான் பதில் சொல்ல வேண்டும்!

  • மித்ரா