guna

எழுத்தாளரை குணா ஜாமீன் எடுக்க எட்டு பேர் தேவை!

ழுத்தாளர் குணா “ஊரார் வரைந்த ஓவியம்” என்ற நாவலை கடந்த வருடம் எழுதி வெளியிட்டார். அதில், சாதி வெறி குறித்து பதிவு செய்திருந்தார். இதனால் இன்றளவும் பலவித எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறார். இது குறித்து ஏற்கெனவே நமது patrikai.com இதழில் எழுதியிந்தோம்.

இன்று நம்மை தொடர்புகொண்ட துரை.குணா, “சமூக அக்கறை கொண்டு, எனது நாவலில் சாதி வெறியை பதிவு செய்தேன். இதனால்  ஆதிக்க சாதியைச் சேர்ந்த மணல் குவாரி நடத்துபவர்கள்,  தலித் இன மக்களை வைத்தே என்னையும் குடும்பத்தினரையும் தாக்கினார்கள், ஊரைவிட்டு விரட்டினார்கள், என் மீது மட்டுமின்றி என் வயதான பெற்றோர் என் மனைவி என நான்கு பேர் மீதும் பொய் வழக்கு போட்டார்கள். வெளிப்படையாக இயங்கிக்கொண்டிருக்கும் என்னை தலைமறைவு குற்றவாளி என வேண்டுமென்றே போலீஸ் பதிவு செய்திருக்கும் கொடுமையும் நடந்திருக்கிறது. இப்போது நான், என் பெற்றோர், மனைவி என நால்வரையும் ஜாமீன் எடுக்க ஆளுக்கு ரெண்டு பேர் என்று எட்டு பேர் தேவை. அதற்கு ஆள் இல்லை. சமூக அக்கறையோடு நாவல் எழுதிய எனக்கு இதுதான் இந்த சமுதாயம் கொடுத்திருக்கும் பாதுகாப்பு, மரியாதை!” என்றார் மனம் நொந்து.

12052491_1515604022092062_5723752327572132454_oகுணா, சி.பி.எம். கட்சி உறுப்பினர். அந்த கட்சியின் இலக்கிய அமைப்பான த.மு..எ.க.சங்கத்தில் பொறுப்பிலும் இருக்கிறார். ஆகவே சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வான பீமாராவிடம், இந்த விவகாரம் குறித்து கேட்டோம். அவர், “ஏற்கெனவே குணாவுக்கு கட்சியினர் உதவியிருக்கிறார்கள். தொடர்ந்து உதவுவார்கள்” என்றார். ஆனால் இன்றுகுணா நம்மிடம் பேசியபோது, “சி.பி.எம். தரப்பில் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னை சிக்கலில்தான் மாட்டிவி்டார்கள். கட்சியினர் எனக்கு ஆதரவாக இல்லை” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், சி.பி.எம். கட்சியினர் கைவிட்டது குறித்து தான் எழுதிய முகநூல் பதிவு பற்றியும் குறிப்பிட்டார்.

“ழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த பதிவைப் படிக்கும் போதே அதிர்ச்சியாக இருக்கிறது. சி.பி.எம். கட்சியினர் மணல் குவாரிகாரரிடம் பணம் வாங்கிக்கொண்டு தனக்கு எதிராக செயல்படுவதையும் அதில் குறிப்பிட்டிருக்கிரார் குணா.

“கருவிழி மூந்த பிறகு நீங்கள் ஏற்றிவைக்கும் திருவிளக்கு தான் யாருக்கு?

உயிர் போன பிறகு கண்டன கூட்டங்களையும், கண்ணீா் போஸ்டா்களையும், கட்சி நிதிகளையும் பெற்ற தோழா் என்ற பெயரோடு முடிந்துவிடக் கூடாது.
என் பேனா வரலாறு.

வளைந்து கொடுக்காத மரம் முறிந்துவிடும். முறிந்தாலும் முறியும் ஆனால் வளைந்து கொடுக்காது இந்த மரம்.

ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு ஒரு தொட்டு கண்ணீா் சுறந்தாலும் கூட அது மாற்றான் வலிக்கு மருந்துக்கு பயன்பட வேண்டுமென்று சொல்வார் என் அப்பா.

என் சுய சரிதையை எழுதிவிட்டு என்குடும்பத்தோடு கூண்டில் நிற்கவில்லை.

இந்த மக்களின் வலிகளையும், இழிவுகளையும் சிறு பதிவு செய்த இந்த சிறு விளைவுதான் இங்கே ஆளும் ஆதிக்க அதிகார வா்கம். எங்களை குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தி இருக்கு.

45 வருடகாலம் அந்த தளத்தில் போர்க்குணத்தோடு போராடிய எங்கள் கம்யூனிஸ்ட் குடும்பம் இன்று “தலைமறைவு” குற்றவாளிகளாய் ஜாமீனில் வெளிவர எட்டு நபா்களுக்காக ஏங்கி காத்திருக்கிறோம்.

நீங்கள் சொல்லிதான் எதிர் மனுதாரா் மீது உள்ள அத்தனை மனுக்களையும், வழக்குகளையும் திரும்ப பெற்றேன். சமாதானம் என்று இருதரப்பும் எழுத்துப்பூா்வமாக எழுதிமுடித்த பிறகும். எங்கள் மீது மட்டும் வழக்கில் வதைக்கும் உள் அரசியல் தான் என்ன?

.இந்தியா முழுவதும் நாம் எங்கெங்கெல்லாம் சமரசம் செய்துகொண்டோமோ அதோட விளைவுதான் நான் இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுபவித்து எதிர்கொண்டிருக்கிறேன்.

பட்டினி கிடந்து புரட்சி செய்தவனையும், பட்டிமன்றம் பேசி பணம் சம்பாதித்தவனையும்   ஒரே தட்டில் வைத்து பார்க்காதீர்கள், தோழா்களே.

எதுவாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே பேசாமல் இப்படி பொது வெளியில் பேசலாமா? என்று கூட நீங்கள் கேட்கலாம்.

நான் கட்சிக்கு எழுதிய கடிதத்தை மட்டும் தூசி தட்டி அடுக்கினால் ஒரு கட்டுரை தொகுப்பையே வெளியிட்டு விடலாம்.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கருத்தியல் முடிச்சுகளை அவிழ்த்து மறு பரிசீலனைக்கு உட்படுத்தாமல் போன விளைவு தான் இத்தனை ML குழுக்களோ?

மக்களிடம் கையேந்தி காசு வாங்கி கட்சி நடத்தாமல் மணல்குவாரிகாரிடம் பணம் வாங்கி போராட்டம் நடத்துவது யாருக்கு? என்று நான் கேட்டால் நான் கட்சி்க்கு எதிரானவனா?

உள்ளவன் கேள்விக்கும், உணா்வுக்கும் பதில் சொல்லாமல் ஊா்வாயை அடைக்க பயன்படுததும் யுத்திகளையும் நேரத்தையும் எனக்கு பயன்படுத்தி இருந்தால் உங்களின் கூற்றுப்படி என்னிடம் தவறான அணுகுமுறை இருந்திருந்தாலும் கூட அதை நோ்படுத்தி இருக்கலாமே தோழா்களே.

கட்சியை விட்டு என்னை நீக்க எடுக்கும் முயற்சியை போல் கட்சிக்குள் என்னை பயன்படுத்தும் அளவுக்கு ஏன் பயிற்சி எடுக்கவில்லை.

பெருமாள்முருகனை போல் பரிதாபத்திற்கு உள்ளாகி எழுதுகோலை முறித்துக்கொள் என்று நினைத்தாயோ…

சிவப்பு ரத்தம் திசுக்களுக்குள் உறைய காத்திருக்கும் கனப்போராட்டம் வரை அழுக்குகளை அகற்ற அழுத்தி எழுதுவேன்!

இவ்வாறு தனது பதிவில் சி.பி.எம். கட்சியை குணா குறி்ப்பிட்டிருக்கிறார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஜாமீன் கொடுக்க எட்டு பேர் தேவை.

விருப்பம் உள்ளவர்கள் அவரது எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்: 99428 54766.

அவரது முகநூல் பக்கம்: https://www.facebook.com/profile.php?id=100009274351757&fref=ts