stalin
பேராசிரியர் குறிப்பிட்டதை போல எனக்கும் குரல் வளம் இல்லை, நானும் தினந்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுத் தான் வருகிறேன் என்று தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
விழாவில் கருணாந்தி ஆற்றிய உரை: கழகத்தின் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களே, கழகத்தின் பொருளாளர், தம்பி மு.க. ஸ்டாலின் அவர்களே, முதன்மைக் கழகச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்களே, இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் சில கருத்துகளை உங்கள் முன்னால் வைப்பதற்கு நான் மிகுந்த உணர்வோடு உங்களைச் சந்திக்கின்ற இந்த வேளையில், அந்தக் கருத்துகள் எப்படிப்பட்டவை, எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டியவை என்பதை யெல்லாம் நீங்களே சீர்தூக்கிப் பார்த்து நல்ல முடிவெடுக்க வேண்டுமென்று முதலிலே கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம், பேராசிரியர் குறிப்பிட்டதைப் போல, தம்பி துரைமுருகன் குறிப்பிட்டதைப் போல, ஒரு அரசியல் கட்சி மாத்திரமல்ல; இது ஒரு சமுதாய இயக்கம். சமுதாயத்தை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்கின்ற இயக்கம், இந்த இயக்கம். அந்த இயக்கத்தைக் கட்டிக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது. பேராசிரியர் இதே கருத்தை வைத்து நீண்ட நேரம் பேசுகின்ற ஆற்றல் பெற்றவர் என்றாலும், இன்றைய சூழ்நிலையில் அவரும், நானும் எல்லாவற்றிலும் இணைந்திருக்க வேண்டும் என்பதற்கேற்ப, இருவருக்குமே குரல் வளம் சரியில்லாத நிலையில் இன்றைக்கு இருவரும் ஒன்றுபட்டிருக்கிறோம். போகப் போகச் சரியாகி விடும் என்ற நம்பிக்கையிலே தான் இன்றைக்கு நான் சில கருத்துகளை உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன்.
இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், தம்பி மு.க. ஸ்டாலின் தன்னுடைய உரையை நிறைவு செய்வதற்கு முன்பு ஒரு கடினமான ஆனால் உங்களுக்குச் சுலபமான, பாடுபட்டால் பயன் கிடைக்கும் என்ற ஒரு விஷயத்தை உங்களிடத்திலே சொன்னார். இந்த இயக்கத்திற்குத் தொடர்ந்து வெற்றி கிடைக்கும், நாம் எண்ணியதெல்லாம் நடக்கும் என்ற ஒரு சூழல் உருவாக வேண்டுமேயானால், அதற்கு முதல் கட்டமாக நடைபெறவிருக்கின்ற இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளரும் குறைந்த பட்சம் எத்தனை தொகுதிகளை வெற்றி பெற்றுத் தர வேண்டுமென்ற பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இங்கே பேசும்போது ஸ்டாலின் குறிப்பிட்டார். அவர் அவ்வாறு சொன்னதற்குக் காரணம், நீங்கள் கடினமாக உங்கள் உழைப்பை நல்கி உங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில், இதிலே ஒரு போட்டி ஏற்பட்டால் தான், நாம் நினைத்தவாறு வெற்றியினை எய்திட முடியும் என்பதற்காக அவர் அப்படிச் சொன்னார். அப்படி வெற்றி பெற்றுத் தர என்று எடுத்துக் கொள்ளாமல், நாம் நமக்காகப் பாடுபட வேண்டும்.
நமக்காக உழைத்திட வேண்டும். நமக்காக என்றால், நமக்கு நாமே என்பதைப் போல, அந்த உழைப்பு நமக்குத் தருகின்ற வெற்றி அடுத்தடுத்து வருகின்ற பல தேர்தல்களுக்கு அடையாளமாக, அல்லது தொடக்கமாக அமைய வேண்டும் என்கிற ஆர்வத்திலே தான் அவர் இங்கே பேசும் போது அந்த ஒரு கருத்தைச் சொன்னார். உங்களை மிரட்டுவதற்கோ, இல்லாவிட்டால் அவர் எண்ணிக் கொண்டதைச் செய்யாவிட்டால் என்ன ஆகுமோ என்று பயப்படுவதற்கோ சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. அவரையும் சேர்த்துத் தான் அந்த நிபந்தனையை இங்கே இந்த மேடையிலே அவர் சொன்னார். ஆகவே அந்தக் கருத்தை நீங்கள் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, குறைந்த பட்சம் சிறிய மாவட்டங்களில் இரண்டு தொகுதிகளிலும், அதை விட பெரிய மாவட்டங்களில், நாங்கள் உங்களை மீறிக் காட்டுகிறோம், நாங்கள் மூன்று நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று அவரைக் கேட்கின்ற அளவுக்கு, அந்த அளவுக்கு சவால் விடுகின்ற அளவுக்கு நீங்கள் வென்று காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
நான் நிச்சயமாக நம்புகிறேன். “உன்னால் முடியும் தம்பி” என்று அண்ணா எழுதியது என் இதயத்தில் இன்றைக்கும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது. “உன்னால் முடியும்” என்ற அந்த வாசகத்தை நீங்கள் மறக்காமல், இந்தத் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி, பேராசிரியர் அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப் போல வெற்றியை அறுவடை செய்து என்னிடத்திலே அந்த வெற்றிக் கொடியைக் காட்டுவீர்களேயானால் நான் ஏறத்தாழ 92 ஆண்டுகள் வாழ்ந்ததற்கான பயனை, அந்த வெற்றிக் கொடியைப் பார்த்தவுடன் நான் அடைய முடியும். ஆகவே அதற்கு நீங்கள் வழி வகுத்திடுங்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலம் தமிழகத்திலே வாழ வேண்டிய, உலவ வேண்டிய ஒரு இயக்கம். அந்த இயக்கத்திற்கு நேற்றைக்குக் கூட, திருச்சியிலே நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்கின்ற வாய்ப்பு இல்லாவிட்டாலும், அது முடிந்தவுடன் அந்த மாநாட்டின் காட்சிகளைப் பார்க்கின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. பெருமிதத்தோடு திராவிடக் கழகத் தோழர்கள் நேற்றைக்குப் பெற்றிருக்கின்ற வெற்றியை எண்ணியெண்ணி மகிழ்ந்தார்கள். அந்த மகிழ்ச்சியை நாம் அடைய வேண்டுமேயானால், தேர்தலில் நிற்பது, அதிலே வெற்றி தோல்விகளைச் சந்திப்பது என்பதல்ல. வெற்றி ஆனாலும், தோல்வி ஆனாலும் இரண்டையும் சமமாகக் கருதி, அதற்காகத் தோல்வியைச் சமமாக கருதுவோம் என்று யாரும் கருதாமல், வெற்றியைப் பெறுவதைத் தான் நாங்கள் எங்களுடைய முனைப்பானப் பணியாகக் கருதுவோம் என்று சூளுரைத்து, அந்த வெற்றியை அறுவடை செய்ய வேண்டுமென்று உங்களை யெல்லாம் நான் கேட்டுக் கொண்டு, வெற்றிப் பாதையில் நடை போடுங்கள்.
இங்கே நீங்கள் நடக்கின்ற பாதை, ஏதோ அறிவாலயத்திற்கு வந்தோம், அங்கிருந்து செல்கிறோம் என்று எண்ணாமல், தலைவரையும், பொதுச் செயலாளரையும், கழக முன்னணியினரையும் சந்தித்தோம், சந்தித்த நாம் வெற்றியை அறுவடை செய்யப் போகிறோம் என்ற அந்த உறுதியோடு, அந்த சூளுரைக்கின்ற மனப்பான்மையோடு, பாடுபடுங்கள், பணியாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டு,
பேராசிரியர் குறிப்பிட்டதைப் போல எனக்கும் குரல் வளம் இல்லை, நானும் தினந்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுத் தான் வருகிறேன், அநேகமாக உங்களோடு கலந்து பேசுகின்ற அளவுக்கு விரைவில் குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அந்த நம்பிக்கை வீண் போகாமல், குணம் பெறும் நம்பிக்கை மாத்திரமல்ல, நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை இழக்காமல், நாம் இந்தத் தேர்தலில் எதிரிகளுக்குப் பாடம் கற்பிக்கின்ற வகையில் நம்முடைய பணியை வகுத்துக் கொண்டு செயலாற்றுவோம். முதலில் நான் கேட்டுக் கொள்வது, நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், குறிப்பாக சாதியைப் பற்றி, சாதி பேதம் கூடாது என்பதைப் பற்றி அதிகமாக கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இங்கே நம்முடைய நண்பர்கள் அனைவரும் ஒன்று என்ற அந்த உணர்வோடு பாடுபட வேண்டும். நமக்கிடையே சமுதாயத் துறையில் நாம் பரப்பி வந்த சாதிபேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.
“சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற அந்தப் பாடலை நம்முடைய கீதமாகக் கொள்வோம். சாதிகளை நாம் போற்றினால், புகழ்ந்தால், அதற்குப் பாராட்டுத் தெரிவித்தால் அந்தச் சாதிகளே நம்மை அழித்து விடும் என்பதை மனதிலே கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, சாதிகள் அற்ற மதவேறுபாடுகள் அற்ற, மாபெரும் தமிழ்ச் சமுதாயத்தை, திராவிடச் சமுதாயத்தை கட்டிக் காக்க நாம் இன்றைக்கே சபதம் எடுத்துக் கொள்வோம் என்று உங்களுக்கு உணர்த்தி, நானும் உணர்ந்து, நாம் உணர்ந்ததை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற வகையில் பாடுபட, பணியாற்ற என்னைப் போலவே எல்லோரும் தயாராக வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அடுத்த முறை உங்களை யெல்லாம் பார்க்கும் போது, இதே கூடத்தில் நீங்கள் எல்லாம் வெற்றி வீரராக, வெற்றி பெற்ற இளம் வீரராக இங்கே அமர்ந்திருக்கின்ற கண்கொள்ளா காட்சியைக் காண்பேன், காண்பேன் என்ற நம்பிக்கையோடு இந்த அளவில் என்னுடைய உரையை இங்கே நிறைவு செய்கிறேன்.’’