அமெரிக்கை நாராயமன்
“அறநிலையத்துறையிலிருந்து இந்து கோயில்கள் விடுபட்டு, தனியார் நிர்வாகத்தின் கீழ் வரவேண்டும்!” – இப்படி குரல் கொடுத்திருப்பவர், பா.ஜகவைச் சேர்ந்தவரோ, இந்து அமைப்பைச் சேர்ந்தவரோ அல்ல.. காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன்தான்!
“காங்கிரஸில் இருந்து இப்படி ஒரு முழக்கமா” என்ற ஆச்சரியத்துடன் அவரை தொடர்புகொண்டோம்.
அவர் நமக்கு அளித்த பேட்டி..
கே: பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ ஆட்கள்தான், கோயில்கள் தனியார் நிர்வாகத்தின் கீழ் வர வேண்டும் என்று தொடர்ந்து சொல்கிறார்கள். காங்கிரஸ் காரரான நீங்களுமா?
ப: பா.ஜ.கவினருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர்கள் ஸூடோ (pseudo) ஹிண்டுஸ்.. அதாவது போலி இந்துக்கள். இந்துக்கள் நலனுக்காக உழைப்பதாகச் சொல்லும் அவர்கள், இந்துக்கள் நலனையும் பார்ப்பதில்லை, இந்த தேசத்தின் நலனிலும் அக்கறை கொள்வதில்லை. ஹிட்லர் எப்படி பெரும்பான்மை மக்களை, சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் தூண்டி விட்டானோ அது போல மக்களைப் பிரித்து பதவிக்கு வரவேண்டும் என்பதுதான் பா.ஜ.கவினரின் நோக்கம்.
கே: சரி, இந்துக் கோயில்கள் ஏன் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தனியார் வசம் போக வேண்டும் என்கிறீர்கள்?
ப: இந்துக்கோயில்கள் அரசின் கையில் இருப்பதால் எந்த வித நன்மையும் ஏற்படவில்லை. தீமைகள்தான் ஏற்படுகின்றன. தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்லத்தின்போது இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களிலும், கிறித்துவ வழிபாட்டு தலங்களிலும் மக்கள் அடைக்கலமானார்கள். அங்கே அவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டார்.
அந்த வழிபாட்டுத்தலங்களைவிட பெரிய பெரிய கோயில்கள் இருக்கின்றன. ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அங்கே தங்க வைக்க முடியவில்லையே. இந்துக்கள் விரும்பியும்கூட, வெள்ள ஆபத்து காலத்தில் கோயில்களை பயன்படுத்த முடியவில்லை. காரணம், கோயில்கள் அரசின் கையில் இருக்கின்றன. அரசு தூங்கிக்கொண்டு இருந்தது. அதனால்தான் சொல்கிறேன்… கோயில்கள் அரசின் இரும்புப்பிடியில் இருந்து விடுபட்டு, நல்லவர்கள் கைக்கு மாற வேண்டும்.
கே: அரசின் கையிலிருந்து கோயில்கள் மாறினால் லஞ்ச ஊழல் பெருகும், சாதி வேற்றுமை இன்னும் கடுமையாகும், தமிழக்கான முக்கியத்துவம் இன்னும் குறையும் என்ற கருத்து உள்ளதே!
ப: பா.ஜ.கவினர் எப்படி போலி இந்துக்களோ, அதே போல போலி திராவிடர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இப்படி
ஓர் பொய்ப்பிரச்சாரத்தை செய்கிறார்கள். கோயில்கள் நல்லவர்கள் கைக்கு போகவேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். அப்படி நடந்த பிறகும் தவறுகள் நேர்ந்தால் அதற்கான கண்காணிப்பு அவசியம். அதே போல அனைத்து சாதியினரும் அரச்சகர் ஆகவேண்டும் என்பதையும் ஆதரிக்கிறேன். அதே போல தமிழ் அர்ச்சனை என்பதையும் ஆதரிக்கிறேன். ஆகவே போலி திராவிட கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பாதீர்கள்.
கே: தனியார் வசம் உள்ள சிதம்பரம் கோயிலில் பெரும் ஊழல் நடப்தாக தொடர்ந்து புகார்கள் வருகின்றனவே!
ப: எங்கு ஊழல் நடந்தாலும் களையப்பட வேண்டும். அதற்காக நல்லவர்கள் கைகளுக்கு கோயில்கள் செல்ல வேண்டும் என்ற கருத்தை தவறு சொல்ல முடியாது. தவிர, சிதம்பரம் கோயில் நிர்வாகம்தான் வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாய் அளித்தது.
கே: சரி, கோயில்கள் தனியார் நிர்வாகத்துக்கு வரவேண்டும் என்பதை நீங்கள் சார்ந்த காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா?
ப: (சிரிக்கிறார்) கடந்த 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே “கோயில்கள் அரசின் பிடியிலிருந்து விடுபட்டு, நல்லவர்கள் கைகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கு முயற்சிப்போம்” என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே இது எனது தனிப்பட்ட குரல் அல்ல. காங்கிரஸ் கட்சியின் குரல்தான்!
கே: அப்படியானால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மூலம் அறிக்கைவிடச் செய்யலாமே..!
ப: இது இதை நான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் சொன்னேன். அவரும் அறிக்கைவிட தயாரானார். “முஸ்லிம்களுகான வழிபாட்டுத தலங்களை சுதந்திரமான வக்பு வாரியம் நிர்வகிப்பது போல இந்துக்களின் கோயில்களும் சுந்திரமான அமைப்பால் நிர்விக்கப்பட வேண்டும்” என்ற வாசகத்துடன் அறிக்கை தயாரித்து, பத்திரிகைகளுக்கு கொடுக்கச் சொன்னார். ஆனால் அந்த அறிக்கை வெளியாகவில்லை!
கே: ஏன்?
ப: இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற ஒரு தோற்றத்தை காங்கிரஸ் மீது சிலர் பூசுகிறார்கள். அதை உடைத்து, இந்துக்களுக்கும் ஆதரவான கட்சிதான் காங்கிரஸ் என்பதை மக்களுக்கு உணரவைக்கவும் இந்த அறிக்கை பயன்படும். ஆனால், எங்கள் கட்சியில் உள்ள திராவிட ஆதரவாளர்கள், காங்கிரஸ் வளர்வதை விரும்பவில்லை. ஆகவே அந்த அறிக்கையை வரவிடாமல் தடுத்துவிட்டார்கள்.
கே: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர். அவரிடமே தங்கள் செல்வாக்கைச் செலுத்தி, அறிக்கையை வரவிடாமல் தடுத்தவர்கள் யார்?
ப: அதை நான் சொல்ல மாட்டேன். காங்கிரஸ் கட்சி வளரவேண்டும் என்கிற அக்கறை கொண்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அந்த அறிக்கையை வெளியிட விரும்பினார். ஆனால் அது வெளியாகவில்லை. இது உண்மை.
பேட்டி: டி.வி.எஸ். சோமு