3 c
தெருமுனை பிரச்சாரம், போஸ்டர் ஒட்டுவது, ஆர்ப்பாட்டங்கள், சிறை நிரப்பும் போராட்டம்… இப்படி நடந்து வந்த அரசியல் இப்போது “சமூக இணையதளம்” என்கிற இணைய உலகத்துக்கு வந்திருக்கிறது.    “சமூக இணையதளங்களில் எழுதுவதெல்லாம் பணியா” என்று நினைத்த அரசியல்வாதிகள் பலரும்கூட இப்போது இங்கே வந்துவிட்டார்கள்.
ஆனாலும், “சமூக இணையதளங்கள் மூலமாக அறிமுகமாகி அரசியல் செய்பவர்கள் உரிய அங்கீகாரம்  பெற முடியுமா ” என்ற கேள்வி இருந்தது.
அந்த கேள்விக்கு, (கிட்டதட்ட) “முடியும்” என்ற பதிலாக வெளிப்பட்டிருக்கிறார் ஆரோக்ய எட்வின்.
நாங்குனேரியைச் சேர்ந்த  இந்த இளைஞர்,  நிர்வாக இயலில் மேற்படிப்பு படித்து, தனியார் துறையில் உயர் பதவியில் இருப்பவர். கடந்த 2011ம் ஆண்டில்  தி.மு.க. ஆதரவு பக்கத்தை முகநூலில் துவங்கியவர்களுள் ஒருவர்.  மேலும் தனக்கென்றும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் பெயரிலும் முகநூல் பக்கங்களை உருவாக்கி, திமுகவுக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி வருபவர்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பாக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு செய்தார்.  தி.மு.க. தலைவர் கருணாநிதி பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் நடத்திய நேர்காணலிலும் பங்கெடுத்து வந்திருக்கிறார்.  சமூக இணையதளம் மூலம் (மட்டுமே) கட்சிப்பணி ஆற்றி, வேட்பாளர் நேர்முகத் தேர்வு வரை சென்றிருப்பவர் இவர்  மட்டுமே.
நெட்டிசன்கள் சார்பாக வாழ்த்துக்களைக்கூறி  ஆரோக்ய எட்வினிடம் பேசினோம்.
3 a
“ நாங்குநேரி அருகே  இளங்குளம் – பரபப்பாடி என்ற சிறு கிராமம்தான் என் சொந்த ஊர். மிகவும் வறுமையான குடும்பம்.  நாங்குநேரியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு  2 செயிண்ட் சேவியர் மேநிலைபள்ளியில் ப்ளஸ்டூ முடித்தேன்.  குடும்ப சூழலால் பாம்பே சென்றேன். அங்கு பி.காம் முடித்தேன். பிறகு  சென்னை வந்தேன். எம்.பி.ஏ. படித்தேன்.
அதன் பிறகு கடந்த  13 வருடங்களாக  சென்னையில் தனியார் துறையில்  பணியாற்றுகிறேன். இப்போது  உலகிலேயே  எண்ணெய் வியாபாரத்தில் இரண்டாம் இடம் வகிக்கும் பெரிய நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றுகிறேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஆரோக்ய எட்வினிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
நேர்காணலின் போது கருணாநிதி, ஸ்டாலின் உங்களிடம் என்ன கேட்டார்கள்?
“நல்ல சம்பளத்தில் பணியாற்றுகிறீர்கள். எதற்காக  அரசியலுக்கு வருகிறீர்கள்” என்று தளபதி கேட்டார். “நாங்குநேரி தொகுதிக்கு பணிகள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றேன். தலைவர் கலைஞர், “கட்சிக்கு என்ன செஞ்சிருக்கே” என்றார். “ஆளும் கட்சிக்கு எதிரா கடந்த ஐந்து வருடங்களாக இணையத்தில்  தீவிரமாக யல்படுகிறேன்” என்றேன்.

ஆரோக்ய எட்வின் முகநூல் பக்கம்
ஆரோக்ய எட்வின் முகநூல் பக்கம்

சென்னையில் வசிக்கும் நீங்கள் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறீர்களே..!
ப: என் சகோதரர் அங்கு  ரியல்  எஸ்டேட் பிஸினஸ் செய்கிறார். மற்ற உறவினர்களும் அங்குதான் இருக்கிறார்கள்.  அதனால் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரில்தான் இருப்பேன். அங்கு செல்லும்போது, மக்களிடம் பேசுகிறேன். அவர்களது பிரச்சினைகள் என்ன என்பதை நேரில் அறிந்திருக்கிறேன். ஆகவேதான் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்தேன்.
தி.மு.க. மீது உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?
தி.மு.க.வால் கிடைத்த இட ஒதுக்கீட்டால்தான் எங்கள் குடும்பத்தினரும் பள்ளி, கல்லூரியில் படிக்க முடிந்தது. அனைத்து துறைகளிலும்.. குறிப்பாக இன்று ஐ.டி. துறையில் ஓரளவாவது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேரந்தவர்கள் பணி புரிகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தி.மு.க.தான். தலைவர் கலைஞர்தான்.  என் மாணவ பருவத்தில் இருந்தே தி.மு.க. ஆதரவாளனாகத்தான் இருக்கிறேன். கலைஞர், தளபதி,  கனிமொழி அக்கா  ஆகியோரை தவிர வேறு சிந்தனையே எனக்குக் கிடையாது.
தி.மு.க.வில் எப்போது உறுப்பினராக சேர்ந்தீர்கள்?
கடந்த வருடம் சேர்ந்தேன். ஆனால் நான் சொன்னது போல, சிறு வயதில் இருந்தே தி.மு.க.வின் தீவிர ஆதரவாளராகத்தான் இருக்கிறேன். எப்போதும் நான் திமுக தான்.
தி.மு.க. சார்பாக  உங்கள் நடவடிக்கைகள் என்ன?
2011ல் “இணைய தள திமுக” என்ற முகநூல் பக்கத்தை துவக்கியவர்களில் நானும் ஒருவன்.  இதை எங்கள் சொந்த முயற்சியில் துவங்கி தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதை 16 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள்.  தவிர நாங்குனேரி தி.மு.க. சட்டமன்றதொகுதி என்ற முகநூல் பக்கத்தையும் நிர்வகிக்கிறேன். இதில் 2500 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தவிர எனது முகநூல் பக்கத்திலும் தொடர்ந்து தற்போதய அ.தி.மு.க. அரசின் தவறான நடவடிக்கைகளை விமர்சிக்கிறேன். தி.மு.க.வுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகிறேன்.
 இணையதளங்களில் கட்சி பிரச்சாரம் செய்வது எடுபடாது. களத்தில் இறங்கி பணியாற்றுவதுதான் ஓட்டுக்களாக மாறும் என்று சொல்லப்படுவது பற்றி..
களத்தில் இறங்கி பணியாற்றுவதும் சிறப்பான ஒன்றுதான். ஆனால் இந்த நவீன காலத்தில் சமூக இணையதளங்களின் மூலம்தான் குறுகிய காலத்தில் மிக அதிகமானவர்களை  அடையமுடியும்.
தெருமுனை பிரச்சாரம் செய்தால் ஒரு நேரத்தில் இருபதில் இருந்து அதிகபட்சம் இருநூறு பேரிடம் நமது கருத்து சென்றடையும்.  ஆனால் சமூக இணையதளங்கள் மூலம் நான் இருந்த இடத்தில் இருந்தே 20000 பேரை ரீச் செய்கிறேன். இதுதான் இதுதான் படித்தவர்களுக்கும்  டெக்னாலஜி தெரிந்தவர்களுக்குமான யுக்தி. சரியான யுக்தி.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எனது பேஸ்புக் பதிவுகள் ஒரு லட்சத்து 27ஆயிரம் பேரை  அடைந்திருக்கிறது என்பதில் இருந்தே இதை உணர முடியும்.
ஆனாலும் கட்சி போராட்டங்களில் கலந்துகொள்வது, தொண்டர்களின் வீட்டு விசேங்களுக்கு செல்வது மூலம் நேரடி தொடர்பு வைத்துக்கொள்வது, அவர்களுக்கு செலவு செய்வது.. இதெல்லாம் இணையதளங்கள் மூலம் நடக்காதே..
கடந்த 2012 ஜூலை 4 அன்று நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் நாங்குநேரியில் பங்குபெற்றேன். என்னையும் கைது செய்து மாலை வரை திருமணமண்டபத்தில் அடைத்து வைத்தார்கள். ஆக, நானும் கட்சிப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குப் போயிருக்கிறேன்.
வார இறுதி நாட்களில் ஊரில் இருக்கும் போது, நண்பர்கள் உறவினர்கள் இல்ல விசேங்களில் கலந்துகொள்கிறேன். இதே போல கட்சி தொண்டர்களிடையே தொடர்புகள் ஏற்படும்போது, அவர்கள் இல்ல விசேசங்களிலும் கலந்துகொள்ளத்தான் போகிறேன். இது இயல்பாக நடப்பதுதானே..
செலவு என்கிறீர்கள்.. கட்சிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறேன். இப்போதும் முகநூலில் எனது பக்கங்களில் திமுக ஆதரவு கருத்தை பதிவி்ட்டு அவற்றை பூஸ்ட் செய்கிறேன். அதற்கு தினமும்  2000 ரூபாய் இருந்து 3000 ரூபாய் வரை ஆகிறது.  ஆக  கட்சிக்காக செலவு என்பது ஒரு விசயமே அல்ல.
ஐ.டி .துறையில் இருந்து அரசியலுக்கு வருகிறீர்கள். இங்கே அரசியலுக்கென்று ஒரு பாணி உண்டு. உங்களுக்கு அது சரிவருமா?
யெஸ்…  நான் கார்ப்பரேட் செக்டரில் இருந்து வர்றேன்..! ஸோ, என்னால கூழை கும்பிடு போட முடியாது.  அவ்வளவு ஏன், எனக்கு கரை வேட்டி ஒத்து வராது. போண்ட் சர்ட் தான்.  (சிரிக்கிறார்) இப்போது மக்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.  வேட்பாளர்  நேர்முக தேர்வுக்காக சென்றபோதுகூட  கலைஞர் முன்னாலே பேண்ட் அணிந்துதான் உட்கார்ந்திருந்தேன்.
வழக்கமான அரசியல்  பாணி என்பது பந்தா காட்டுவது. ஒரு  எம்.எல்.ஏ. வந்தால் நாலு பேனர் வைக்கணும், அவர் கார் பி்ன்னால நாப்பது கார் போகணும் என்றெல்லாம் இருக்கிறது. இதை நான் விரும்பவில்லை. அதற்கு செலவு செய்யும் பணத்தில்  ஐநூறு  குழந்தைகளுக்கு உணவு அளிக்கலாம். அல்லது  அவர்களது  கல்விக்கு ஏதேனும் உதவலாம் என்பதுதான் என் எண்ணம்.
அதோடு மக்களுக்காக உழைக்கணும். தி.மு.க.வின் பெயரை மக்கள் மனதில பதிக்கணும். இதுதான் என் லட்சியம். அதை நிறைவேற்ற நான் போகிற பாதை சரி என்றே நினைக்கிறேன்.
நாங்குநேரி தொகுதிக்கு நீங்கள் செய்ய விரும்பும் பணிகள் என்னென்ன?
முதலும் முக்கியதுமான பணி, நாங்குநேரி தொகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுதான்.  அங்கிருந்து வந்து சென்னை, மும்பையில் கொடிகட்டி பறக்கும் தொழிலதிபர்கள் பலர் உண்டு. அவர்களிடம் பேசி, நாங்குநேரி தொகுதியில் தொழிற்சாலைகளை கொண்டுவருவேன்.
தி.மு.க. காலத்தில்தான் நாங்குநேரியில் 1500 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டு வரப்பட்டது. அதை தற்போதைய அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்திருக்கிறது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை முழு வீ்ச்சில் செயல்பட செய்வேன்.
இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு  ஆங்கிலம் அறிவு அவசியம். ஆகவே நாங்குநேரி தொகுதியில் ஐந்து கி.மீட்டருக்கு  ஒரு  ஆங்கி பயிற்சி மையம் அமைப்பேன்.  அங்கு ஆங்கிலம் மட்டுமின்றி தன் முனைப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்கு வகுப்பெடுக்க, தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி பேராசிரியர்களை அணுகுவேன். போக்குவரத்து செலவை நான் ஏற்றுக்கொள்வேன்.
ஆக, முழு மூச்சாக வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டாலே தொண்ணூறு சதவிகித பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
மக்களுக்கு வாழ வழிவகை செய்யாமல் இலவசம் என்கிற பெயரில் அவர்களை மழுங்கடித்துவிட்டோம். இந்த நிலை மாறவேண்டும். அதற்கு என்னாலான அத்தனை முயற்சிகளையும் செய்வேன்.
– ஆரோக்ய எட்வினுக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.
– டி.வி.எஸ் சோமு