ஹராரே
ஜிம்பாப்வே நாட்டின் துணை அதிபர் கான்ஸ்டாண்டினோ சிவெங்காவை கொல்ல முயன்றதாக அவர் மனைவி மேரி முபைவா கைது செய்யபட்டுளார்.
கான்ஸ்டாண்டினோ சிவெங்கா ஜிம்பாப்வே நாட்டின் துணை அதிபராகப் பதவி வகித்து வருகிறார். இவர் மனைவி மேரி முபைவா முன்னாள் மாடல் அழகி ஆவார். இவர் அந்நாட்டுப் பெண் தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவர் தனது கணவரை மருத்துவச் சிகிச்சைக்காகத் தென் ஆப்ரிக்காவுக்கு அழைத்துச் சென்றார்.
அந்த பயணத்தின் போது துணை அதிபர் கான்ஸ்டாண்டினோ சிவெங்காவை அவர் மனைவி மேரி முபைவா கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன் அவர் மீது பண மோசடி வழக்கும் பதியப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து நீதிமன்றம் கேட்டதற்கு மேரி முபைவா பதில் அளிக்கவில்லை. விரைவில் இவர் ஜாமீன் பெற உள்ளதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.