இஸ்லாமாபாத்:

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு. பாகிஸ்தான்  சிறப்பு நீதிமன்றம்  தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் (வயது 72), தனது ஆட்சிக்காலத்தில் 2007-ம் ஆண்டு அரசியல் சாசனத்தை இடைநீக்கம் செய்து நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார்.

பின்னர் பாகிஸ்தானில் ஆட்சி மாறியதும் கடந்த 2016ம்ஆண்டு நவாஸ் ஷெரீப் ஆட்சியின் போது, நெருக்கடி நிலை பிரகடனம் ரத்து செய்யப்பட்டு, முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப் பட்டது.

அதையடுத்து பெஷாவர் உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி 3 பேர் கொண்ட சிறப்பு நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டார்.

அதன்படி பெஷாவர் நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் சேத் (Waqar Seth), சித்து உயர் நீதி மன்றத்தின் நீதிபதி நாசர் அக்பர் (Justice Nazar Akbar) மற்றும் லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஷாகித் கரீம் (Justice Shahid Karim) உள்ளடக்கிய மூன்று உறுப்பினராக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இந்த  3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முஷரப் மீதான தேசத்துரோக விசாரணை நடத்தியது. விசாரணையைத் தொடர்ந்து முஷாரப்  வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முஷரப் நீதிமன்றத்தின் அனுமதியுடன்  துபாயில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இன்று வரை அவர் நாடு திரும்பவில்லை. விசாரணையின்போது ஆஜராக முஷரப்  அவ்வப்போது தனது வழக்கறிஞர் மூலம் வாதங்களை முன்வைத்துவந்தார். இந்த வழக்கு முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான தேசத்துரோகம் உறுதிப்படுத்தப்பட்ட தாகவும், அதனால் அவருக்கு  மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.