டில்லி
உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள்து.
கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் பாகிஸ்தான் இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது நடத்திய தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் உண்டாகி இருக்கிறது. அதனால் இந்திய ராணுவத்தை சேர்ந்த விமானப்படை தளபதி பி எஸ் தனோவா மற்றும் கடற்படை தளபதி சுனில் லம்பா ஆகியோரது பாதுகாப்பு குறித்து இந்திய உளவுத்துறையால் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில் அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது கண்டறியப்பட்டது. இந்திய உளவுத் துறை இது குறித்து மத்திய அரசுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியது. மத்திய அரசு இந்த தகவலை பரிசீலித்து இந்திய விமானப்படை தளபதி பி எஸ் தனோவா மற்றும் கடற்படை தளபதி சுனில் லம்பா ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது.
இந்திய ராணுவ தளபதிகளுக்கு வழக்கமாக அவரவர் சம்பந்தப்பட்ட படைப்பிரிவினரே பாதுகாப்பு அளித்து வருவார்கள், ஏற்கனவே இந்திய ராணுவ தலைமை தளபதி விபின் ரவத் துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகளுக்கும் கூடுதலாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.