சென்னை: யுடியூப் சேனலை பார்த்து கொள்ளையடிக்க கற்றுக்கொண்டு  கொள்ளையடித்த 2 கொள்ளையர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

இணையதளத்தின் அசூர வளர்ச்சி ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படுவதை விட அழிவுப்பாதைக்கு செயல்படுத்தப்படும் நிகழ்வுகளே அதிகரித்து வருகிறது.  இந்தகொரோனா காலக்கட்டத்தில் யுடியூப் சேனல்கள்  மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களுக்கு கல்வியை போதித்து வரும் நிலையில், மற்றொருபுறம் இதே யுடியூப் சேனல், கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களுக்கும் ஆசானாக திகழ்கிறது.

சென்னையில யுடியூப் சேனல் மூலம் கொள்ளையடிப்பது குறித்து கற்றுக்கொண்டு கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதன் மற்றொருபுறம்  பணம் சம்பாதிக்கும் நோக்கில் அனைத்துவிதமான வீடியோ பதிவுகளும் ஏற்றப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.   செய்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, பல லட்சக்கணக்கான தனியார்களும் தங்களது நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமின்றி, தங்களது வீடுகளில் செய்யும் சமையல் வரை அனைத்தையும் வீடியோவாக எடுத்து யுடியூப் சேனலில் பதிவேற்றி மகிழ்கிறார்கள். ஏற்கனவே யுடியூப் சேனல் மூலம் கள்ளநோட்டு அச்சிட்டதும், கொலை, கொள்ளைகள், பாலியல் கொடுமை போன்ற நிகழ்வுகள் அரங்கேறி உள்ள நிலையில், தற்போது சிறுவர்களுக்கும் கொள்ளையடிக்க கற்றுக்கொடுத்து வருகிறது.

இதுபோன்ற ஒரு சூழலில்தான் புளியந்தோப்பு பகுதியில் கைது செய்யப்பட்ட இரு கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் யுடியூப் சேனரில், கொள்ளையடிப்பது குறித்து கற்றுக்கொண்டு கொள்ளையடித்ததாக தெரிவித்து உள்ளனர்.

கடந்த புதன்கிழமை சாலையில் நடந்துகொன்றவர்களிடம் இரு இடங்களில் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது.  சென்னை கேம்.எம்.கார்டன் பகுதியில் காலையில்  டீக்கடைக்கு சென்றுகொண்டிருந்த நபரில் பைக்கில் வந்த இருவர், அவரதுசெல்போனை பறித்துச்சென்றனர்.  அதுபோல,  அன்றைய தினம் மாலை,  தட்டாங்குளத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வீட்டுக்கு நடந்துசென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த இருவரால், அவரது செல்போனும் பறித்துச்செல்லப்பட்டது. இதுகுறித்து அவர்கள் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார்கொடுத்தனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் கொள்ளை நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி புட்டேஜ் கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இதில் கொள்ளையடித்தவர்கள்  படப்பையைச் சேர்ந்த ஜான்சன் (வயது 25), பிரதீப் (வயது 26) என்பது தெரிய வந்தது. அவர்களை வாகன சோதனையின்போது காவல்துறையினர் மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் யுடியூப் சேனலை பார்த்து கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் இருந்து,  ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் 15  போன்கள் மீட்கப்பட்டன.  இதில், ஜான்சன் என்பவர்  இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமூக வலைதளமான யுடியூபை நவீன யுகத்திற்கு ஏற்ப நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், கொள்ளையடிக்க பயன்படுத்தி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.