சென்னை: அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் தலைமைச்செயலகம் அருகே போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போர் நினைவுச்சின்னம் அருகே போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.
மத்தியஅரசு அறிவித்துள்ள ஒப்பந்த அடிப்படையிலான ராணுவ ஆள்சேர்ப்பு முறையான அக்னிபாத் திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடமாநிலங்களில் இளைஞர்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அக்னிபாத் திட்டத்தில் வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை மற்றும் 10சதவிகித ஒதுக்கீடு போன்றவை அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த இளைஞர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தலைமைச் செயலகம் அருகே போராட்டம் நடத்த முயன்ற நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுத்துநிறுத்தினர். இதையடுத்து அவர்கள் போர் நினைவுச்சின்னம் முன்பு கோஷங்களை எழுப்பி போராடினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்..கைதான இளைஞர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.