தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டங்களில் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசை கண்டித்து, அனைததிந்திய இளைஞர் பெரு மன்றத்தினர் சார்பில் இன்று தஞ்சாவூரில் போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற நாசகார திட்டங்களை கைவிட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் தஞ்சாவூரில் போராட்டம் நடைபெற்றது.
மேலும் ஆற்று மணல், தாதுமணல், இயற்கை வளங்களின் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலி யுறுத்தியும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து போராட்டக்குழுவினர், அங்கிருந்து முழக்கங்களை எழுப்பியவாறே, ஊர்வலமாக புறப்பட்டு பழைய ஆட்சியர் அலுவலகமான பனகல் கட்டிடத்தை முற்றுகையிடுவதற்காக வந்தனர். அங்கு, ழைவு வாயில் கதவை கிழக்கு காவலாளர்கள் பூட்டி இரும்பு கம்பிகளாலான தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.
ஊர்வலமாக வந்தவர்கள் பனகல் கட்டிடம் முன்பு வந்தபோது அவர்களை காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் பனகல் கட்டிடத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.