சென்னை: தமிழகத்தில் புதிதாக ஒரு சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் கடந்த சில நாட்களாக பதிவாகி வருவதாக கூறிய டிஜிபி சைலேந்திர பாபு, பொதுமக்களுக்கு அது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக சைபர் குற்றத்தில் ஈடுபட்டு வரும் ஒரு குடும்பல் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதிய வகை சைபர் க்ரைம் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. நீங்கள் அனுப்பி உள்ள பார்சல் திரும்பி வந்துள்ளதாக உங்களுக்கு கால் வரும். அதில் இது குறித்து தகவல் தெரிய வேண்டும் என்றால் ஒன்றை அழுத்தவும் என்று கூறுவார்கள்.
ஒன்றை அழுத்திய பிறகு, நீங்கள் மும்பையில் இருந்து தைவானுக்கு அனுப்பிய பார்சல் திரும்பி வந்துள்ளது. அதில் போதைப் பொருள் உள்ளது. நாங்கள் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்து உள்ளோம் என்று கூறுவார்கள். இதைக் கேட்ட உடன் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள். மேலும் காவல் நிலையத்திற்கு இணைக்கிறோம் என்று தெரிவிப்பார்கள்.
மேலும் காவல் துறை அதிகாரிகள் போல், உங்களின் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கை பயன்படுத்திதான் இதை செய்துள்ள காரணத்தால் உங்களின் மீது வழக்குப் பதிவு செய்ய போகிறோம் என்று தெரிவிப்பார்கள். உடனடியாக நீங்கள் விசாரணைக்கு வாங்கள் என்று கூறுவார்கள்.
நான் இது போன்று செய்யவில்லை என்று நீங்கள் தெரிவித்தால் மற்றொருவர் உங்களுடன் பேசுவார். அவர்கள் இப்போது அரசு வழக்கறிஞர் உங்களுடன் பேசுவார் என்று தெரிவிப்பார். அந்த நபர் உங்களிடம் 1 லட்சம் ரூபாய் கேட்பார். நீங்கள் 1 லட்ச ரூபாய் கொடுத்த பிறகு மேலும் ரூ. 5 லட்ச ரூபாய் கேட்பார். இப்படி உங்களின் பணத்தை வாங்கிவிடுவார்கள்.
கடந்த சில நாட்களில் இது போன்று 70 புகார்கள் வந்துள்ளன. இது போன்று ஏதாவது எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் தொடர்பை துண்டித்துவிடுங்கள். எனவே எச்சரிக்கை இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.”
,இவ்வாறு அந்த வீடியோவில் எச்சரித்துள்ளார்.