சென்னை: சென்னையில், கெட்டுபோன டோனட் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பேக்கரியை பொது மக்கள் சூழ்ந்த நிலையில், பேக்கரி உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகால உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என தெரிந்தே இளம் தலைமுறையினர், துரித உணவுகள், டோனர், பீட்ஷா, சவர்மா என பல்வேறு உணவுகளை உண்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே சவர்மா சாப்பிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரபல தனியார் பேக்கரி ஒன்றில் டோனட் கேட் வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவத்தன்று சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில், அந்த பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் யுவராஜ் என்பவர், தனது குழந்தைக்கும், அவரது உறவினர் குழந்தைக்கும் டோனட் கேக்குகளை வாங்கிக் கொடுத்துள்ளார். டோனட் கேக்குகளை சாப்பிட்ட குழந்தைகள் இருவருக்கும் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகள் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து குழந்தைகள் சாப்பிட்டு போக வீட்டில் மீதம்இருந்த டோனட் கேக்குகளை பெற்றோர் சோதித்ததில், கேக்குகள் பூசனம் அடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு குழந்தையின் பெற்றோர் சென்று கேட்டபோது கடையில் இருந்த ஊழியர் முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையில், பேக்கரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீதமிருந்த டோனட் கேக்குகளை கடை ஊழியர் குப்பையில் வீசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்த வந்து விசாரணை நடத்திய நிலையில், உணவு பாதுகாப்பு துறையினரும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
விசாரணையில், பேக்கரியில் உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்ற நபர் ஒருவரும் இல்லை என்பதும், ஊழியர்கள் முறையாக சுகாதார சான்றிதழ்களை பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.