புதுடெல்லி:
பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், குடியரசு தலைவர் உரை என்பது நாட்டின் தலைமைக்கான உரையாக இல்லாமல் அரசு அதிகாரிகள் கொடுத்த தகவலாகவே உள்ளது. தற்போது 2 இந்தியாக்கள் உள்ளன. பணக்கார இந்தியா, ஏழை இந்தியா என தற்போது நாடு இரண்டாக உள்ளது. பணக்காரர்கள் செல்வமும் அதிகாரமும் மிக்கவர்களாக உள்ளனர். நாட்டின் நிலவரம் குறித்த கவலையை இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன். வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு ஒன்றிட அரசு கூறி வரும் நிலையில் 3 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்கவிட்டாலும் வேலை இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. செல்வந்தர்கள், பெருநிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன. உதவி கிடைக்காமல் சிறு குறு தொழில்கள் நசிந்துள்ளன. சிறு, குறு தொழில்களை மத்திய அரசு அழித்துவிட்டது. ஒரு குடிமகனாக நாட்டில் நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து கவலை கொண்டுள்ளேன். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது.

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 55 கோடி மக்களை விட அதிகம் என்பதை ஏழை இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்நாட்டு மக்கள் எப்போதுமே அமைதியாக இருப்பார்கள் என்று நினைத்து விடாதீர்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய இலக்கு பாகிஸ்தானையும் சீனாவையும் தனித்தனியாக வைத்திருப்பதுதான். நீங்கள் அவர்களை ஒன்றிணைத்தீர்கள். இதுதான் நீங்கள் இந்திய மக்களுக்கு எதிராக செய்த மிகப்பெரிய குற்றம். மேக் இன் இந்தியா என கூறிக் கூறியே சிறுதொழில்களை அழித்துவிட்டீர்கள்; 5 கோடி மக்களை வறுமை கோட்டிற்கு கீழே தள்ளிவிட்டீர்கள். ராகுல் காந்தி உரையின் போது பாஜவினர் குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக தலையீட்டுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி; தேசம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் எங்கும் இல்லை. மாநிலங்களின் ஒன்றியம் என்றே இந்தியா நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்படுகிறது. பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது. நீங்கள் என்ன கனவு கண்டாலும் சரி உங்களால் அதை சாதிக்கவே முடியாது எனவும் கூறினார்.