ஒன்றியம் என்பது மாநிலங்களின் கூட்டாட்சி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது மன்னராட்சி அல்ல, மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை அதை நீங்கள் செய்ய தவறினால் உங்கள் வாழ்நாளில் ஒருநாளும் நீங்கள் தமிழகத்தை ஆள முடியாது என்று ராகுல் காந்தி மத்திய அரசை சாடினார்.

பட்ஜெட் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஏழை பணக்காரர்களிடையே உள்ள வித்தியாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியா இப்போது இரண்டு பிரிவாக இருக்கிறது.

நாட்டின் மொத்த வருமானத்தில் 40 சதவீதம் ஒரு சில பெரும் பணக்கார குடும்பத்தின் கையில் உள்ளது என்று கூறினார்.

வேலைவாய்ப்பு குறித்தோ வேலையில்லா திண்டாட்டம் குறித்தோ ஜனாதிபதியின் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை, தவிர இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான திட்டம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், அண்டை நாடுகளுடன் தவறான வெளிநாட்டு கொள்கையால் பாகிஸ்தானும் சீனாவும் இப்போது ஒன்றாக இணைந்துள்ளது இது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்றும் கூறினார்.

மத்திய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நடுத்தர மக்கள், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் என்று யாருக்கும் உதவாத சூனிய பட்ஜெட் இந்த பட்ஜெட் என்று ஏற்கனவே ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இவரின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.