கலால் வரி கொள்கை தொடர்பாக அன்னா ஹசாரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில், அரசியலுக்கு சென்று முதலமைச்சரான பிறகு இலட்சிய சித்தாந்தத்தை மறந்து விட்டீர்கள் என்று கூறியுள்ளார்.
டெல்லியில் கலால் கொள்கையில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் மது தொடர்பான பிரச்சனைகளையும், அதற்கான ஆலோசனைகளையும் அன்னா அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே எழுதியிருப்பதாவது: “சுவராஜ்’ என்ற இந்த புத்தகத்தில் எத்தனை இலட்சியமான விஷயங்களை எழுதியிருக்கிறீர்கள். அப்போது உங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அரசியலில் இறங்கி முதலமைச்சரான பிறகு, நீங்கள் அதை மறந்துவிட்டீர்கள் என்று தெரிகிறது.”
“மதுவின் போதை எப்படி இருக்கிறதோ, அதே போல அதிகாரத்தின் போதை இருக்கிறது. நீங்களும் அத்தகைய போதையில் மூழ்கிவிட்டீர்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் புதிய மதுக் கொள்கை மூலம் மது விற்பனையும், குடிப்பழக்கமும் அதிகரிக்கும், சாலையோர மதுக்கடைகள் அதிகரிப்பதன் மூலம் ஊழல் ஆறாக பெருக்கெடுத்து ஓடும். இது பொதுமக்களின் நலனுக்கு எதிரானது என்றும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கலால் கொள்கை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சந்தித்து வருகிறது. இந்தக் கொள்கையின் மூலம் கட்சிக்கு நெருக்கமானவர்கள் ஆதாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
தவிர, இந்த கொள்கையின் மூலம் ஊழல் நடந்ததாக பா.ஜ.க. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மற்றும் அமைப்புகள் மீது சிபிஐ விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த எட்டாண்டுகளாக பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்த அன்னா ஹசாரே தற்போது ஆம் ஆத்மி அரசையும் அவரது சகாவான அரவிந்த் கெஜ்ரிவாலையும் விமர்சித்து கடிதம் ஒன்றை வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.