You may soon get delivery of petrol, diesel at your doorstep
முன்பதிவு செய்தால் பெட்ரோல், டீசலை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது.
பெட்ரோலியத்துறையின் ட்விட்டர் தளத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கால பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிற்க விரும்பாதோர், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் எப்போது முதல் அமலாகும் என்று தெரிவிக்கப்படவில்லை.
உலகிலேயே பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதில் மூன்றாவது பெரிய சந்தையைக் கொண்ட நாடு இந்தியா. நாள்தோறும் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு பெட்ரோல், டீசல் வணிகத்தில் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. எனவே, இந்தச் சந்தையை நவீனப்படுத்துவதில், இந்திய அரசு மட்டுமின்றி, பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களும் கவனம் செலுத்தி வருகின்றன.
இதனிடையே, மே 1ம் தேதி முதல், நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நாடுமுழுமைக்கும் இந்த நடைமுறை விரிவு படுத்தப்படும் எனவும் தெரிகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.