சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் சேர 26ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில்கள் கல்லூரிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகஸ்டு -1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என கடந்த வாரம் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் அறிவித்ததை நிறுத்தி, அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப் பணிக்கு தேர்வு செய்வதற்கான அறிவிப்பு பின்னர் முறையாக அறிவிக்கப்படும். அவர்கள் டி.ஆர்.பி. அல்லது டி.என்.பி.எஸ்.சி. மூலமாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்வதாகக் கூறி கடந்த ஆட்சியில் குழு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டுவிட்டது. இனிமேல் தமிழகத்தில் இருக்கிற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு, முறையாக நடைபெறும். அவர்கள் முறையாக அவர்களின் பணியை மேற்கொள்ளலாம்.
22-ந் தேதி பிளஸ்‘–2 மாணவர்களுக்கு மதிப்பெண் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கிடைத்தவுடன், பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் சேர்வதற்காக 26-ந் தேதியில் இருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளும் 31ந்தேதிக்குள் வந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே 26ந்தேதி முதல் வரும் ஆகஸ்ட் 24ந்தேதி வரை அவர்கள் விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்தந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்கு அனைத்து கல்லூரிகளும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.