லக்னோ: இந்துவாக இருந்து கொண்டு முஸ்லீம்களை நண்பராக கொண்டு இருக்கிறீர்களே என்று சிஏஏ போராட்டத்தின் போது உ.பி.யில் கைதான சமூக ஆர்வலரிடம் காவல்துறை கேள்வி எழுப்பி இருக்கிறது.
டிசம்பர் 20 ம் தேதி லக்னோவில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ராபின் வர்மாவுக்கு கடந்த வாரம் ஜாமீன் வழங்கப்பட்டது.
காவல்துறையின் வசம் இருந்த போது தாம் எவ்வாறு நடத்தப்பட்டோம்? போலீசார் எப்படி அணுகிறார்கள் என்பது பற்றி விரிவாக கூறி இருக்கிறார். அவர் தெரிவித்துள்ளதாவது:
போலீசார் என்னை உடல் ரீதியாக சித்திரவதை செய்து அவமதித்தனர். எனது மனைவி மற்றும் குழந்தைகளை இழிவுபடுத்தி பேசி, அச்சுறுத்தினர். எனக்கு முஸ்லீம் மாணவர் ஒருவர் எனது பிறந்தநாளில் என்னை வாழ்த்தினார்.
அவர்கள் செய்தியை எனது செல்போனனில் பார்த்து என்னிடம் அவரை ஏன் அறிவீர்கள் என்று கேட்டார்கள். உங்கள் தொலைபேசி பட்டியலில் ஏன் முஸ்லிம் பெயர்கள் உள்ளன. நீங்கள் ஏன் அவர்களுடன் நண்பர்களாக இருக்கிறீர்கள்?
நீங்கள் ஏன் அவர்களுடன் செல்கிறீர்கள் என்று பல கேள்விகள் கேட்டனர். என் மனைவியை பாலியல் தொழிலாளியாக்குவோம். 2 வயது மகளையும் அவ்வாறே செய்வோம். என்னையும் என் குடும்பத்தையும் அழித்துவிடுவோம் என்று கூறி இருக்கிறார்.