தீவிரவாதிகள் தாக்குதலில் ஜம்முவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆகஸ்ட் 13 ம் தேதி மதுரை விமான நிலையம் வந்த தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது நடைபெற இருந்த தாக்குதல் சம்பவம் முறியடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசிய மூன்று பெண்கள் உட்பட பாஜக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்பு இருப்பதாக இருதினங்களுக்கு முன் ஆடியோ ஒன்று வெளியானது.

இந்த ஆடியோவில் உள்ள குரல் தனதுதான் என்று கூறிய அண்ணாமலை ஆனால் திமுக ஐ.டி. பிரிவு அதை எடிட் செய்து வெளியிட்டுள்ளதாக கூறினார்.

அண்ணாமலையின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பாஜக மேலிடம் அண்ணாமலையை ஓரம்கட்ட தமிழகத்தில் இரட்டை தலைமையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், நாட்டுக்காக உயிர்நீத்த தியாகியின் மரணத்தை அரசியல் விளம்பரத்துக்காக பயன்படுத்துபவர்கள் பெயரைச் சொல்ல வெட்கப்படுகிறேன்.

தேசிய கொடி பொருத்திய கார் மீது செருப்பு வீசுவதை திட்டமிட்டது மட்டுமல்லாமல் பொய் பிரச்சாரம் மூலம் வன்முறையை தூண்டுபவர்கள் தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று பி.டி.ஆர். தனது ட்விட்டரில் இன்று பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, “உங்கள் முன்னோர்களின் முதலெழுத்து மட்டுமே உங்களுக்கு பெருமை சேர்கிறது, உங்களது பிரச்சனையே இதுதான், ஒரு விவசாயின் மகனாக பிறந்து சுயமாக முன்னேறி இன்றும் பெருமையுடன் விவசாயம் செய்துகொண்டிருக்கும் ஒரு நபரை ஏற்றுக்கொள்ள உங்களால் முடியாது.

நீங்கள் அரசியலுக்கும் இந்த மாநிலத்துக்கும் சாபக்கேடு!

பெரிய விமானங்களில் பயணம் செய்யாத எங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுபோன்ற (மதுரை வன்முறை சம்பவம்) ஒன்றைத் திட்டமிடும் அளவுக்கு நான் ஒருபோதும் இறங்க மாட்டேன், கவலைப்படாதீர்கள். இறுதியாக, நீங்கள் என் கால் செருப்புக்கு கூட தகுதியானவர் இல்லை என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.