காசியாபாத்: இந்திய ராணுவத்தை ‘மோடியின் சேனை’ என்று குறிப்பிட்டு பேசிய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
டெல்லி அருகே காசியாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், “காங்கிரஸ்காரர்கள், தீவிரவாதிகளுக்கு பிரியாணி தருகிறார்கள். ஆனால், மோடியின் சேனையோ(இந்திய ராணுவம்), அவர்களுக்கு தோட்டாக்களையும் குண்டுகளையும் பரிசாக தருகிறது. இதுதான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு” என்று மோசமான முறையில் பேசியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தகைய கருத்தின் மூலம், இந்திய ராணுவத்தை உத்திரப்பிரதேச முதல்வர் அவமானப்படுத்தி விட்டார் என்றும், அவர் உடனடியாக தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்திய ராணுவம் என்பது ஒரு தனியார் சொத்தல்ல என்றும், அது ஒட்டுமொத்த தேசத்திற்கானதுமாகும் என்றும் கூறியுள்ள அவர்கள், கடந்த 1999ம் ஆண்டில், பாரதீய ஜனதா ஆட்சியில் நடைபெற்ற விமானக் கடத்தல் சம்பவத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டுமென கண்டித்துள்ளனர்.
– மதுரை மாயாண்டி