லக்னோ: லஞ்ச ஊழல் மற்றும் முறைகேட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 200க்கும் மேற்பட்ட மாநில அரசு அதிகாரிகளை, உத்திரப்பிரதேச அரசு கட்டாய ஓய்வு கொடுத்து, வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் இது நடந்துள்ளது. மேலும், 400க்கும் அதிகமானோர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
யோகி ஆதித்யநாத் அரசு கடந்த 2017ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், அரசு அதிகாரிகளின் தவறுகளை கண்டறிவதற்கான ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினுடைய அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு, தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மாநில அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான ஸ்ரீகாந்த் ஷர்மா கூறியதாவது, “417 அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் இருக்கிறார்கள். அவர்களின் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்ச தண்டணை கிடைக்கும்” என்றுள்ளார்.