லக்னோ: யோகி அரசாங்கம் தற்போது 25,000 ஊர்க்காவல் படையினரை பணியிலிருந்து விடுவித்ததுடன், இன்னும் 95,000 பேரையும் வீட்டுக்கு அனுப்பவுள்ளதென்ற செய்தி சம்பந்தப்பட்டவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
காவல் நிலையங்கள் மற்றும் போக்குவத்து சிக்னல்களில் பணியாற்றி வந்த இவர்களை இவ்வருடம் 28 ஆகஸ்ட் அன்று உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் பணியிலிருந்து விடுவிக்க முடிவெடுக்கப்பட்டது.
நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்தத் தகவலின் படி அவர்களது ஊதியம் காவல் துறை ஊழியர்களுக்கு நிகராக உயர்த்தப்பட்டதால் துறையின் பட்ஜெட் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் பட்ஜெட்டின் சுமையைக் குறைக்க இந்நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிகிறது.
சட்டம் ஒழுங்குத் துறையில் ஊர்க்காவல் படையின் எண்ணிக்கை 32 சதவீதம் குறைக்கப்பட்டதாகவும், மேலும் 95,000 பேர்களை பணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளதாகவும் அத்துடன் இருப்பவர்கள் 25 நாட்களிலிருந்து குறைத்து 15 நாட்களுக்கு பணிக்கு வரச் செய்ய உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.