மாஸ்டர் திரைப்பட வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் தளபதி விஜய். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் . இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வருகிறது படக்குழு.

தளபதி 65 படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டெ நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. படத்தின் வில்லனாக இயக்குநர் செல்வராகவன் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டது.

தளபதி 65 படத்தில் சண்டை இயக்குநர்களாக இரட்டையர்கள் அன்பறிவ் பணியாற்றுகிறார்கள். மெட்ராஸ், கபாலி, கைதி போன்ற படங்களில் பணியாற்றிய இவர்கள், கே.ஜி.எப் 1 படத்திலும் சண்டை இயக்குநர்களாக பணியாற்றியிருந்தனர். அதோடு அந்தப் படத்தின் சிறப்பான சண்டைக் காட்சிக்காக தேசிய விருதையும் பெற்றனர்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் அங்கு தொடர்ச்சியாக 18 நாட்கள் ஷூட்டிங் பணிகளில் ஈடுபட்ட படக்குழு சென்னை திரும்பியது.

இந்த சூழலில் தளபதி 65 பட ஷூட்டிங் சென்னையில் நடப்பதாகவும் அதற்காக பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் பரவின. குறிப்பாக இந்த ஷாப்பிங் மால் செட்டை அயல்நாட்டு ஷாப்பிங் மாலுக்கு இணையாக அமைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

சென்னை எம்.ஆர்.சி நகரில், அதாவது ஹோட்டல் லீலா பேலஸ்க்கு அடுத்து இந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கப்படுவதாக தகவல் வெளியானது.

ஆனால் தொற்றுநோய் சூழ்நிலை மற்றும் கோவிட் -19 காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை படக்குழு ஒத்திவைத்துள்ளது. இதனால் இப்படத்தை 2022-ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இந்நிலையில் விஜய்யின் 65-வது படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் நடிகர் யோகி பாபு. மெர்சல், சர்கார், பிகில் படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் யோகி பாபு நடிக்கும் நான்காவது படம் இது.