டில்லி:

ந்தியாவின் பிரதமராக யோகி ஆதித்யநாத் பதவியேற்பார் என்று அவரது தந்தை ஆனந்த் பிஷ்ட் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பாரதியஜனதா கட்சியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

உ.பி.மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத்  பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், உத்தர காண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரது தந்தை ஆனந்த் பிஷ்ட் கூறுகையில், வரும்  2024ம் ஆண்டில் தனது மகன் யோகி ஆதித்யநாத் இந்தியாவின் பிரதமராக இருப்பார் என்றும்,   உத்தரப் பிரதேசம் யோகிக்கு ‘உத்தமப்பிரதேசமாக’ மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற எம்.பியாக இருந்த யோகி ஆதித்யநாத், உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக வென்றதும் முதல்வராக்கப்பட்டார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார்.

ஆதித்யநாத் பதவி ஏற்றபிறகு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் நாடு முழுவதும் பரபரப்பானவர். சிறுபான்மையினருக்கு எதிரான போக்கால், பாரதிய ஜனதாவிலும் அவரின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.

மோடி எப்படி குஜராத் முதல்வராக இருந்து பிரதமராக பதவி உயர்வு பெற்றாரோ அதுபோல, யோகியும் தற்போது முதல்வராக இருக்கிறார். விரைவில் அவர் பிரதமராக பதவி ஏற்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் தந்தை வெளிப்படையாகவே, 2024ம் ஆண்டு பிரதமராக ஆவார் என்று கூறியிருப்பது பாரதியஜனதா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.