திருச்சி

மயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா தொடங்கியது.

திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.  இங்கு தினசரி மற்றும் விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாகும்.   இங்கு வருடா வருடம் நடைபெறும் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கி உள்ளது.  இந்த விழாவைக் குறித்து இங்குக் காண்போம்.

பக்தர்களின் நோய்களைத் தீர்க்கவும் உலக நன்மைக்காகவும் சமயபுரம் மாரியம்மன் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை பச்சை பட்டினி விரதம் இருப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது.  இந்த காலகட்டத்தில் அம்மனுக்குத் தளிகை நைவேத்தியம் படைக்கப்படுவது கிடையாது.  மாறாக நீர் மோர், இளநீர், பானகம், துள்ளுமாவு போன்றவை படைக்கப்படும்.

இந்த ஆண்டு நேற்று மாசி மாத கடைசி ஞாயி|று என்பதால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பச்சை பட்டினி விரதம் தொடங்கப்பட்டது.  இந்த விரத நாட்களில் முதல் நாள் அன்று பூச்சொரிதல் விழா நடைபெறும் அதன்படி நேற்று அதிகாலை சிறப்புப் பூஜைகளுடன் 7 மணிக்குப் பூச்சொரிதல் விழா தொடங்கிக் காப்புக் கட்டுதல் நடந்துள்ளது.

இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் தெற்கு ரத வீதியில் இருந்து யானை மூலம் பல வண்ண மலர்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.    இந்த மலர்கள் மாரியம்மனுக்குச் சாற்றப்பட்டு வழிபாடு நடந்தது.  மேலும் பல இடங்களில் இருந்து பக்தர்கள் எடுத்து வந்த மலர்களும் அம்மனுக்குச் சாற்றப்பட்டுள்ளது.