திருச்சி

நேற்று திருச்சியில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. 

நேற்று திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு 74 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்த போது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும், கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் அமர வைக்கப்பட்டனர்.

விமானத்தின் புறப்படும் நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இருந்தது.  இதையொட்டி  அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள்  திருச்சி விமான நிலையத்தில் தவிக்க நேர்ந்தது.

விமான நிறுவனம் மாற்று விமானம் மூலமாகச் செல்ல விரும்பும் பயணிகள் செல்லலாம் என்றும், அவ்வாறு செல்ல விருப்பமில்லாத பயணிகள் டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெற்று கொள்ளலாம் என்றும் அறிவித்தது. சில பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.

இதர பயணிகள் சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து மாற்று விமானத்தில் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.