சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், நிலை தடுமாறி தண்ணீர் லாரியில் சிக்கி அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ. இவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்தார். அந்த சாலையின் நடுவில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக அதிமுக பிரமுகர் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது தண்ணீர் லாரி ஒன்று ஏறி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது சுபஸ்ரீக்கு இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சாலைகளின் நடுவே பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், பேனரால் ஒரு பெண் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலையில் அத்துமீறி வைக்கப்படும் பேனர்களால் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்வது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு முன்பாக, கோவையிலும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது. சாலையின் வளைவின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் மோதி ரகு என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 2017ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுக் கம்பத்தினால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ரகு உயிரிழந்த இடத்திலேயே Who Killed Ragu என்ற வாசகத்தை அவரது நண்பர்கள் சிலர் எழுதினர். சமூக வலைதளங்களிலும் #WhoKilledRagu என்ற ஹேஷ்டேக் அப்போது பிரபலமானது. நீதிமன்றத்திற்கு இதுதொடர்பான வழக்கு சென்ற போது, அலங்கார வளைவால்தான் விபத்து ஏற்பட்டத்தை உறுதி செய்த நீதிமன்றம், இதுபோன்று நடுரோட்டில் பேனர்கள் வைப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது.

அன்று ரகு என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் தற்போது சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரத்திற்கு பலியாகியுள்ளார். பேனர் கலாச்சாரத்தால் தொடர்ந்து உயிர் பலிகள் நடப்பதன் காரணமாக, தற்போது சமூக வலைதள வாசிகள் அரசியல் கட்சிகளை இதற்காக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.