டில்லி

நேற்று டில்லியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துள்ளார்.

வரும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். கடந்த மாதம்  காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை நிதிஷ் குமாரும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் சந்தித்துப் பேசினர்.

அடுத்து, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக், சிவசேனா (யுபிடி) தலைவர்உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரையும் இவர்கள் சந்தித்துப் பேசினர்.  நேற்று மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை நிதிஷ் குமார் டில்லியில் நேற்று மீண்டும் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு கார்கே இல்லத்தில் நடைபெற்றது.   இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் மற்றும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் லலன் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பாட்னாவில் நடத்துவது குறித்தும் இச்சந்திப்பின் போது ஆலோசனை நடத்தி உள்ளனர்.