சென்னை

நாளை முதல் ஊரடங்கு அமலாவதையொட்டி டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடி மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவலை முன்னிட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   அவற்றில் ஒரு பகுதியாக டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கின.

இதனால் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   இதை கருத்தில் கொண்டு நாளை முதல் 15 நாட்களுக்கு அமலாகும் ஊரடங்கில் தமிழக அரசு மதுபானக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்கள் மட்டும் பகல் 12 மணி வரை விற்கப்பட உள்ளன.

அவ்வகையில் மதுக்கடைகள் நேற்றும் இன்றும் முழு நேரம் இயங்கி வருகிறது.  இதையொட்டி நேற்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்துள்ளனர்.   நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.426 கோடிக்கு மது விற்பனை ஆகி சாதனை படைக்கபட்டுள்ளது.

இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது.  அடுத்ததாக திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடிக்கும் மூன்றாவதாக சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடிக்கும் கோவை மண்டலத்தில் ரூ.76.12 கோடிக்கும் மதுபான விற்பனை நடந்துள்ளது.