சென்னை:
ல்லோர்க்கும் எல்லாம் என்பதே லட்சியம் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறி உள்ளதாவது: தமிழகத்தின் முதல்வர் என்ற பொறுப்பை ஏற்று கொண்டதற்கு பிறகு எழுதும் முதல் கடிதம் இது ஆகும். தமிழகத்தில் மீண்டும் முன்னேற்ற பணிகளை முயல் வேகத்தில் முடுக்கி விடும் தலையாய பொறுப்பை சுமந்திருக்கிறேன். தமிழகத்தை தரணியிலேயே சிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்றி காட்ட வேண்டும் என்பதே எனது சூளுரை. கடந்த 10 ஆண்டுகளாக ஏமாற்றங்களையே எதிர்கொண்ட மக்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. நேர்மையான தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும். ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு எப்போதும் பாடுபடும்.

இது திமுக என்ற கட்சியின் அரசு அல்ல. எந்தவித பேதமும் பாகுபாடும் இல்லாம்ல எல்லா பிரிவினைரையும் அரவணைப்புடன் அழைத்து செல்லும் அரசு. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று நடத்தும் தமிழக அரசு என்பதை அழுத்தமாக உணர்த்த விரும்புகிறேன். தேர்தல் என்பது மக்களாட்சியின் மாண்புகளுள் ஒன்று. அது போர்க்களம் அல்ல. ஜனநாயக களத்தில் எதிரெதிர் அணிகளாக மோதி கொள்வது இயல்பு என்றாலும், நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்.

திமுகவினர் மாற்று கட்சி தோழர்களோடு நட்புணர்வுடன் மக்கள் பிரச்னைகளை அணுகி தீர்வு காண வேண்டும்.எல்லா வகைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழகத்தை முன்னேற்ற வேண்டும்.நெருக்கடிகளை வலிமையுடன் எதிர்கொண்டு மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறி உள்ளார்.