காந்திநகர் குஜராத் மாநில சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகர் நிமாபென் ஆசாரியா நேற்று பதவி ஏற்றார்.
பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை சபாநாயகராக ராஜேந்திர திரிவேதி பதவி வகித்து வந்தார். அவர் கடந்த 16 ஆம் தேதி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து குஜராத் புதிய முதல்வர் பூபேந்திர படேல் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி ஏற்றார். இதனால் குஜராத் மாநில சட்டப்பேரவையில் சபாநாயகர் காலி ஆனது.
இந்த பதவிக்கு பாஜக மூத்த பெண் சட்டப்பேரவை உறுப்பினர் நிமா பென் ஆச்சாரியா பரிந்துரைக்கப்பட்டார். இவரைச் சபாநாயகராக நியமிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்தது. இதையொட்டி நிமா பென் ஆச்சாரியா குஜராத் மாநிலத்தின் முதல் பெண் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
நேற்று 2 நாட்கள் நடைபெறும் குஜராத் மாநில சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் நேற்று நிமா புதிய சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தாம தமது புதிய பொறுப்பை தம்மால் இயன்றவரைச் சிறப்பாக நியமிக்க உள்ளதாகக் கூறி உள்ளார். இவருக்கு முதல்வர் பூபேந்திர படேல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.