சேலம்: ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு ஆகியோர் விழாவை தொடங்கி வைக்கின்றனர். இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் சிறப்பு மிக்க சுற்றுலாத் தளமாக விளங்கும் ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. ஏற்காட்டில் ஆண்டு தோறும் கோடை விழா நடைபெற்று வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கோடை விழா நடைபெறாத நிலையில், நடப்பாண்டு 45-வது கோடை விழா மலர் கண்காட்சி இன்று (25-ம் தேதி) தொடங்கியது.
இன்று காலை 10 மணிக்கு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விழாவை தொடங்கி வைத்தனர். விழாவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகிக்கிறார். எம்பி, எம்எல்ஏ-க்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த கோடை விழா ஜூன் 1-ம் தேதி வரை கோடை விழா நடைபெறுகிறது.
ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி மற்றும் மாம்பழம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கோடை விழாவின் போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் அனைத்து அரசுத் துறைகளும் பங்கேற்கும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், செல்லப் பிராணிகள் கலந்து கொள்ளும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
ஏற்காடு கோடை விழாவுக்கென சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்காட்டின் முக்கிய இடங்களை ஒரு நாள் முழுவதும் சுற்றிக் காண்பிக்கும் வகையில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோடை விழாவின்போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வாகனங்கள் ஏற்காடு செல்லும் போது வழக்கமான சேலம் – ஏற்காடு நெடுஞ்சாலை வழியாகவும், திரும்பி செல்லும் போது ஏற்காடு, குப்பனூர் – சேலம் வழியாகவும் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடும்பத்தினருடன் மகிழ்வுடன் வந்து செல்ல தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.