சென்னை: தமிழகத்தில்  இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு  இன்று மற்றும் நாளை (ஜூன் 1, 2)  கன மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,  தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சனிக்கிழமை (ஜூன்1) முதல் ஜூன் 6 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

ஜூன் 1-இல் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன் 2-இல் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா் மற்றும் வேலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதனால் இந்த மாவட்டங்களுக்கு கன மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:

ஜூன் 1,2-ஆகிய தேதிகளில் குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.