ஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

இக்கோயிலில் அம்மன் ஏகௌரியம்மன் என்ற பெயருடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன் தேவர்களை துன்புறுத்தினான். இதனால் கலங்கிய தேவர்கள் சிவனிடம் தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன் அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான். அம்பிகை அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால் அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி “ஏ கவுரி! சாந்தம் கொள்” என்றார். கணவன் சொல் கேட்ட அம்பிகை சாந்தமானாள். இவளுக்கு கரிகாலற்சோழ மன்னன் இங்கு கோயில் எழுப்பினான். சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு ஏகவுரியம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. வழக்கமாக அம்பாள் கோயில்களில், சன்னதியில் பூஜித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோயிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள். அம்பிகையை வேண்டி இங்கேயே எலுமிச்சை சாற்றை குடித்து விட வேண்டும். இதனால், விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே, இந்த பிரசாதம் கொடுக்கப்படும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்பிகைகக்கு ஹோமத்துடன் விசேஷ பூஜை நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று அம்பிகைக்கு சண்டி ஹோமம் நடக்கும்.

நோயால் பாதிக்கப்பட்ட கணவர் குணம் பெற, பெண்கள் இங்கு வேண்டினால் பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த அம்பிகையை வேண்டினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம்.