சென்னை: ஆண்டுக்கு 500 ரேசன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். மதுரையில் கோளரங்கம் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை தொடர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதி & குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக இன்று காலை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் தெரிவித்தனர்.
அப்போது உறுப்பினர்கள் புதிய ரேசன் கடைகள், தங்களது பகுதியில் ரேசன் கடைகள் அமைக்க வேண்டும், ரேசன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என பல கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில், நடப்பாண்டு முதல் ஆண்டுதோறும் 500 நியாயவிலைக்கடைகளுக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.
மேலும், இந்த காலகட்டத்தில் அதிகமான எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதை பார்க்கிறோம். மக்களின் தேவை என்பது அருகில் கடைகள் வரவேண்டும் என்றும் பேருந்துகள் அருகாமையில் வரவேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம்.
ஆற்காடு தொகுதி புங்கனூர் ஊராட்சி எல்லாசிகுடிசை, வரதேசி நகர், விளாப்பாக்கம் பேரூராட்சி, சின்னதக்கை பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றும் . இதனை துறை அலுவலர்களுக்கு எடுத்து சென்று புதிய நியாய விலைக்கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் 4 கோளரங்கம் இருந்தாலும், தென்மாவட்டங்களில் ஏதும் இல்லை; மதுரையில் உடனடியாக கோளரங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? ராஜன் செல்லப்பா எம்எல்ஏ என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய அமைச்சர் பொன்முடி, புதிய கோளரங்கம் அமைக்கப்பட்டால் மதுரைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.36 கோடி செலவில் தமிழ்நாட்டில் 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படும் என்று உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.