ஈரோடு: விண்ணை முட்டும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு, திருப்பூரில் ஜவுளி வியாபாரிகள் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். இந்த போராட்டம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக் மெர்சண்ட்ஸ்  அசோசியேசன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் இன்று (திங்கட்கிழமை) நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கனி மார்க்கெட் தினசரி மற்றும் வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் சங்கம், பவர்லூம் கிளாத் மெர்சன்ட்ஸ் அசோஷியேஷன், டெக்ஸ்டைல்ஸ் டிரேடர்ஸ் அசோசியேசன், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம், நூல் வியாபாரிகள் சங்கம், சூரம்பட்டி விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம், சென்னிமலை விசைத்தறியாளர்கள், பனியன் மார்க்கெட் வியாபாரிகள், தமிழ்நாடு சைசிங் மில் ஓனர்ஸ் அசோஷியேஷன், ஸ்கிரீன் பிரின்ட் அசோசியேசன், கைத்தறி துண்டுகள் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட 25 சங்கங்கள் கடையடைப்பு போரா ட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

விலை உயர்வு காரணமாக நூல் துணி வணிகங்களும் பாதிக்கப்பட்ட உள்ளது. இதனால், ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நூல் விற்பனையை நீக்கவும் அத்யாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், ஜவுளி சந்தையில் 280 தினசரி கடைகளும், 780 வாரசந்தை கடைகளும், அசோகபுரத்தில் 2000 கடைகள், டி.வி.எஸ் வீதியில் 150 கடைகள், சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட்டில் 1500 கடைகள் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றன.  ஈரோடு மாநகரில் இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படும். இதனால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.