சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக அனுதாபி ஞானசேகரன்  மீதான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆன்லைன் வாயிலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் எதிர்பார்க்கப்பட்டதுபோல ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றும், வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் யார் அந்த சார் என்ற கேள்வி புரியாத புதிராகவே உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த  திமுக பிரமுகர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றொருவர் யார் என கேட்டு, யார் அந்த சார் என போனர்கள், பேட்ஜ் அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மாணவி பாலியல் விவகாரம் மற்றும் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) வெளியான விவகாரம் குறித்து தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஞான சேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆன்லைன் வாயிலாக முதல்கட்ட குற்றப் பத்திரிகையை இன்று (பிப்.24) தாக்கல் செய்துள்ளனர். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளது என அந்த குற்றப்பத்திரிகையில் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஞானசேகரனின் செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்யும் வகையில் அவருக்கு சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் எதிரே உள்ள அரசு தடயவியல் துறை கூடத்தில் 3 மணி நேரம் குரல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. குரல் பரிசோதனை போன்று ரத்த பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய தடயமாக பார்க்கப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தற்போது முதல்கட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக,  டிசம்பர் 23 அன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். குற்றம் சாட்டப்பட்டவர் ஞானசேகரன் என்ற திமுக நபரும் அந்த பகுதியில் பிரியாணி கடை  நடத்தி வருபவருமான ஒருவர்  அடையாளம் காணப்பட்டார். தாக்குதலை படம்பிடித்து பாதிக்கப்பட்டவரை மிரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவர் சார் என யாரிடோ பேசியதாகவும் மாணவி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து யார் அந்த சார்? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் FIR கசிவு இரண்டையும் விசாரிக்க ஒரு SIT ஐ அமைத்தது. கசிவுக்கு காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், சென்னை காவல் ஆணையர் A. அருண் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்,  டிசம்பர் 28 அன்று, சென்னை உயர் நீதிமன்றம், பாலியல்

வன்கொடுமை மற்றும் எஃப்.ஐ.ஆர் கசிவு இரண்டையும் விசாரிக்க பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. சிறப்பு விசாரணைக் குழுவில் அண்ணா நகர் காவல் துணை ஆணையர் பூக்யா சினேகா பிரியா; ஆவடி டி.சி.பி (சட்டம் மற்றும் ஒழுங்கு) அய்மன் ஜமால்; மற்றும் சேலம் நகரம் (வடக்கு) டி.சி.பி எஸ். பிருந்தா ஆகியோர் உள்ளனர். இந்தக் குழுவிற்கு உதவியாக சைபர் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராகவேந்திரா கே. ரவி செயல்பட்டு வந்தார். இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படுவதற்கு வழிவகுத்த FIR ‘கசிவு’ குறித்து விசாரித்து வரும் விசாரணை குழுவினர், பாதிப்பு உள்ளான மாணவியின் எஃப்ஐஆர் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக 4 பத்திரிகையாளர்களின் செல்ஃபோன்களை பறிமுதல் செய்துள்ளது. இந்த பத்திரிகையாளர்கள் தமிழ்நாடு காவல்துறை வலைத்தளத்திலிருந்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவிறக்கம் செய்திருந்தனர். இதை எதிர்த்து பத்திரிகையாளர்களும் போராட்டம் நடத்தினர்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மேலும் 7 வழக்குகளில் கைது!