சென்னை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நிகழ்ச்சிக்கு தடை விதிக்க  முடியாது என உத்தரவிட்டு உள்ளது.

பிப்ரவரி 26ந்தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் உள்ள ஈஷா மையத்தில், அன்றைய  தினம் மாலை 6மணி முதல் காலை 6மணி வரை  முழு இரவும், ஆட்டம் பாட்டம், தியானம், சொற்பொழிவு என  பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றும். இந்த விழாவில்  இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச்சேர்ந்த பலரும் கலந்து கொள்ள உள்ளனர். லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த சிவராமன் என்பவர்,  ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக்கூடாது என  எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அவரது மனுவில்,  ஈஷாவில் நடைபெறும் சிவராத்திரி விழாவால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும் கூறியிருந்தார்.  மேலும் மனு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி,  மனு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழாவின் போது அனைத்து விதிகளும் பின்பற்றப்படுகின்றன. கழிவு நீர் மேலாண்மை மற்றும் ஒலி மாசுவை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.