சென்னை:
சென்னையில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
பழைய குற்றவாளிகளை கைது செய்தும், தலைமறைவு ரவுடிகளை பிடித்து சிறையில் தள்ளும்படி போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீஸ் படையினர் தலைமறைவு ரவுடியினை வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சூர்யா, கலைவாணன் என்ற இரண்டு ரவுடிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 10–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த ராஜ்குமார், பால்ராஜ் ஆகிய 2 ரவுடிகளும் எம்.ஜி.ஆர் நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பிரபல ரவுடி சி.டி. மணியின் கூட்டாளிகளான இவர்கள் தி.மு.க. பிரமுகர் ஜெகநாதனை சுட்டுக்கொல்ல முயன்ற வழக்கில் தொடர்பு உடையவர்கள்.
அதேபோல் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருநது 35 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு ஏரிக்கரை அருகே கூடுவாஞ்சேரி ரோடு ஓரமாக மறைந்து இருந்த 3 பேரை ரோந்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.