சென்னை: கொரோனா சோதனையின்போது தவறான முடிவுகளை அறிவித்ததாக சென்னை   வடபழனி ஆர்த்தி ஸ்கேன் சென்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்  உள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் சோதனைக்கூடங்களிலும் கொரோனா சோதனை நடத்த மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன.

சென்னையில் மட்டும்  42 தனியார் ஆய்வகங்கள் கொரோனா சோதனைக்கு அனுமதி பெற்றுள்ளன.  ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு 300 மாதிரிகள் சோதனை செய்து வருகின்றன. ஆனால், தனியார் சோதனைக்கூடங்கள் தவறான முடிவுகளை வழங்கி, முறைகேடாக பணம் சம்பாதித்து வருவது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா சோதனைக்கு அனுமதி பெற்றுள்ள பிரபல ஸ்கேன் சென்டரான ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் கொரோனா சோதனை முடிவுகள் தவறாக கிடைப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி விசாரணை மேற்கொண்டது. இதில், சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஸ்கேன் செண்டரில், 128 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது தெரிய வந்தது. அவர்களில்,   44 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக போலியான முடிவுகள் தரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த ஸ்கேன் சென்டருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, அனைத்து ஸ்கேன் செண்டர்களிலும்  சோதனை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக  கடந்த  6 ம் தேதி (அக்டோபர்)  ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்குப் பிறகு, சிலருக்கு கொரோனா நேர்மறை என முடிவு வந்ததைத் தொடர்ந்து, அன்று சோதனை செய்யப்பட்ட  139 மாதிரிகளை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறு ஆர்த்தி லேப்ஸ்க்கு உத்தரவிடப்பட்டது.  அதை ஆய்வு நடத்திய சுகாதாரத்துறையில், அதில் பலருக்கு முடிவுகள் தவறாக இருந்ததை கண்டுபிடித்தது.

இதுகுறித்து கூறிய மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், ஆர்த்தி ஸ்கேன் சோதனை நடத்திய  128 மாதிரிகளை  பொது சுகாதாரத் துறை கண்டறிந்தது சோதனை நடத்தியது.  அதில், 84 மட்டுமே கோவிட் பாசிட்டிவ். மற்ற 44 பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை. ஸ்கேன் சென்டரின் தவறான முடிவு காரணமாக 4% நோயாளிகளுக்கு மன அழுத்தத்துககு ஆளாகி உள்ளனர்.

அது, “நாங்கள் மற்றவர்களிடையே பீதியை உருவாக்க விரும்பவில்லை. எனவே, குறிப்பிட்ட 44 பேருக்கு இது தொடர்பாக  அறிவிக்கவில்லை. நோயாளிகளின் விவரங்களை நாங்கள் கண்டுபிடித்து அவர்களை கண்காணித்து வருகிறோம்”  என்று தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கூறிய பொது சுகாதார இயக்குநர் டி எஸ் செல்வவினாயகம், கொரோனா சோதனையில்  பிழைகள் கண்டறியப்பட்டதும், தனியார் ஆய்வகங்களில் அதிக டிபிஆர் கிடைத்ததும் தரக் கட்டுப்பாட்டு சோதனைகள் தொடங்கி உள்ளதாகவும், அதன் மற்ற கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்ட வருவதாக கூறியுள்ளார்.

மேலும், ஆர்த்தி ஸ்கேன் சென்டர்  “தவறான நேர்மறையான அறிக்கைகள் ஏன் வழங்கியது  என்பதை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. என்றதுடன், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில்,காப்பீட்டு முகவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களிடையே ஒரு இணக்கம் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது என்றும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளார்.

தற்போதைய நிலையில்,  ஓரளவு வசதியானர்கள் மற்றும் செல்வந்தர்கள், தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்து, தனியார் ஆய்வங்களில் கொரோனா சோதனைக்கு செல்வதும், அதன் முடிவைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதும் அதிகரித்து வருகிறது.

அதேவேளையில், கொரோனா சோதனை மற்றும் அதன்மீதான காப்பீடுகள் வணிகரீதியில் பார்க்கப்படுவதால், முறைகேடான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுவதுடன், அவர்களிடம் இருந்து காப்பீடு உள்பட பல வகையில், பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில்  இதனால் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும், இதற்கு காப்பீட்டு முகவர்கள் உள்பட சோதனைக் கூடங்கள், மருத்துவமனைகள் துணைபோகின்றன என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.