ழுத்தாளர் துரை.குணா மீது காவல்துறையினர் வேண்டுமென்றே பொய்வழக்கு தொடுத்து சிறையில் அடைத்திருப்பதை மனித உரிமை செயற்பாட்டாளர் “எவிடன்ஸ்” கதிர் வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது முகநூல் பதிவு:

கறம்பக்குடி காவல் நிலையத்தில் தரையில் உட்காரவைக்கப்பட்டிருக்கும் துரை.குணா (படம் உதவி: கண்ணன்)
கறம்பக்குடி காவல் நிலையத்தில் தரையில் உட்காரவைக்கப்பட்டிருக்கும் துரை.குணா (படம் உதவி: கண்ணன்)

“கடந்த 10.06.2016 அன்று காலை 5.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிராமத்தில் உறங்கிக் கொண்டிருந்த எழுத்தாளர் துரை குணா (எ) குணசேகரனையும், மனித உரிமை ஆர்வலர் பூபதி கார்த்திகேயனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சிவானந்தம் என்பவரை கடுமையாக தாக்கி கத்தியால் குத்தியதாக வழக்கு தொடுத்திருக்கிறது காவல்துறை.
ஆனால் சிவானந்தம் உடலில் சின்ன கீறல் கூட கிடையாது.
பிறகு என்னதான் விவகாரம்?
கறம்பக்குடியில் பர்னிச்சர் கடை வைத்திருக்கிறார் பூபதி கார்த்திகேயன். இவரது உறவினர் தான் சிவானந்தம். கடந்த 6 மாதத்திற்கு முன்பு   பூபதி கார்த்திகேயனிடம் கடனுக்கு பொருட்கள் வாங்கியிருக்கிறார் சிவானந்தம். அதில் பெரும் பகுதியை கொடுத்துவிட்டார். கொஞ்சம் பாக்கி.
கடந்த 09.06.2016 அன்று இரவு 8.00 மணியளவில் பூபதி கார்த்திகேயன் கடை முன்பு சிவானந்தம் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த பூபதி கார்த்திகேயன், சிவானந்தத்திடம் மீதி கடன்  தொகையை கேட்டிருக்கிறார். அப்போது  இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால்,   ஆபாசமாகவோ இழிவாகவோ பேசவில்லை… உரக்க  பேசியிருக்கின்றனர். அவ்வளவுதான்.
அன்று இரவு  9.00 மணியளவில்  சிவானந்தன் வீட்டுக்கு வந்திருக்கிறார் கறம்பக்குடி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மெய்யப்பன்.     ” உனக்கும் பூபதி கார்த்திகேயனுக்கும் என்ன தகராறு? என்று சிவானந்தனிடம் அவர் கேட்க,  அதற்கு சிவானந்தம், “எங்கள் இருவருக்கும் ஒரு தகராறும் இல்லை. நாங்கள் உறவினர்கள்” என்று கூறியிருக்கிறார்.
“அப்படியா உங்கள் பிரச்சனையை இன்ஸ்பெக்டர் அய்யா சகாயம் அன்பரசு முடித்து வைக்க சொல்லியிருக்கிறார். நீ இந்த வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து போடு, கொடுக்கல் வாங்கல் பிரச்சனையை நாங்கள் முடித்து வைக்கிறோம்”  என்று ஆய்வாளர் மெய்யப்பன் கூற, சிவானந்தம் தயக்கம் காட்டியிருக்கிறார். ஆனால் மெய்யப்பன் மிரட்டி சிவானந்தத்திடம் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்.
சிவானந்தம் - எவிடன்ஸ் கதிர்
சிவானந்தம் – எவிடன்ஸ் கதிர்

அதுமட்டுமல்லாமல் சிவானந்தத்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஆலங்குடி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்திருக்கிறார் சார்பு ஆய்வாளர் மெய்யப்பன். தனக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்த சிவானந்தம், “என்ன சார் எனக்கு எதுவும் இல்லை. ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “எங்கள் இன்ஸ்பெக்டர்  சகாயம் அன்பரசு உன்னை மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லியிருக்கிறார். நீ மருத்துவமனையில் இருந்தால் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை எளிதாக முடியும்” என்று கூறியிருக்கிறார் மெய்யப்பன்.
மறுநாள் காலையில் பூபதி கார்த்திகேயனும், துரைகுணாவும் கைது செய்யப்பட்டதை அறிந்த சிவானந்தம், காவல்நிலையத்திற்கு போன் செய்து, “என்னை யாரும் கத்தியால் குத்தவில்லை. எதற்கு தேவையில்லாமல் இருவரையும் கைது செய்திருக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, “மரியாதையாக போனை வைடா” என்று போலீசார் சிவானந்தத்தை மிரட்டியிருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் போலீசார், ஆலங்குடி மருத்துவமனை மருத்துவரிடம்  “சிவானந்தத்திற்கு நெஞ்சுவலி இருக்கிறது. மேல்சிகிச்சை எடுக்க வேண்டும்” என்று கூற, ஆலங்குடி மருத்துவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிவானந்தத்தை அழைத்து செல்ல பரிந்துரை செய்திருக்கிறார்.
தஞ்சைக்குப் போகும் வழியில்,  சிவானந்தத்திடம் போலீசார், “உன்  கையை காயப்படுத்த வேண்டும். அப்போதுதான் வழக்கு பலமாக மாறும்”  என்று கூற, சிவானந்தம் அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட துரைகுணாவும் பூபதி கார்த்திகேயனும் சிறையில் அடைக்கப்பட்டனர்.  நான்,  (எவிடன்ஸ் கதிர்) சிவானந்தனை  தொலைபேசியில் அழைத்து, “உண்மையில் என்ன நடந்தது” என்று கேட்டேன். சிவானந்தம், ” சார் உங்களை நான் சந்திக்க விரும்புகிறேன். நீங்கள் வர முடியுமா?” என்று கேட்டார்.
நான் எங்கள் குழுவினருடன் 12.06.2016 அன்று கறம்பக்குடி பகுதிக்கு சென்று  சிவானந்தத்தையும் அவரது பெற்றோரையும் சந்தித்தேன். மூவரும், “எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டுள்ளனர்” என்று கலக்கத்துடன்  கூறினார்கள்.
சிவானந்தம், “பூபதி கார்த்திகேயனும், துரை குணாவும் என்னை கத்தியால் குத்தியதாக காவல் துறையினர் வழக்கு போட்டிருக்கிறார்கள்.
பூபதி கார்த்திகேயன் கடையில் கடனுக்கு பொருள் வாங்கினேன். அதில் கொஞ்சம் பாக்கி இருக்கிறது.   மற்றபடி எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர் என் உறவினர்.
துரைகுணா என்பவர் யாரென்று கூட எனக்கு தெரியாது. என்னை மிரட்டி வெற்றுக் காகிதத்தில் போலீசார் கையெழுத்து வாங்கினார்கள்” என்று எனக்கு தெரியவில்லை என்று கண் கலங்கினார்.
நான், சிவானந்தத்தை அழைத்துக் கொண்டு துரைகுணாவின் மனைவி கோகிலாவையும் தாயாரையும் சந்திக்க வைத்தேன். அப்போது துரைகுணாவின் மனைவி கோகிலாவிடம் சிவானந்தம்,  “அக்கா எனக்கு உங்கள் வீட்டுக்காரர் யாரென்று கூட தெரியாது. நான் எந்த புகாரும் கொடுக்கவில்லை. போலீசார் என்னிடம் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கூறினார்.
பிறகு எதற்காக பூபதி கார்த்திகேயனும், துரைகுணாவும் கைது செய்யப்பட வேண்டும்?
கறம்பக்குடி  காவல் நிலைய ஆய்வாளர் சகாயம் அன்பரசு என்பவர்தான் இதற்கெல்லாம் காரணம். இவர், பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டு வருபவர். இவருக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்திருக்கின்றனர் பூபதி கார்த்திகேயனும் துரைகுணாவும். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணச்சநல்லூரில் காவல் ஆய்வாளராக இருந்த சகாயம் அன்பரசு, பாலியல் வன்முறை ஒன்றில் ஈடுபட்டிருக்கிறார். அந்த செய்தி தினமலர் பத்திரிக்கையில் வெளிவந்திருக்கிறது. அந்த செய்தியை துரைகுணா பரப்புரை செய்தார்.
இதனால் துரை.குணா மீது வன்மத்துடன் இருந்திருக்கிறார் ஆய்வாளர் சகாயம் அன்பரசு.
அதே போல,  சகாயம் அன்பரசின் அத்துமீறலை நேரடியாக எதிர்த்து கேள்வி கேட்டபவர் பூபதி கார்த்திகேயன்.
ஆகவே, தனது அத்து மீறல்களை எதிர்த்து கேட்கும் இருவரையும் பழிவாங்க, அப்பாவி சிவானந்தனை பகடைக்காயாக பயன்படுத்தியிருக்கிறார் ஆய்வாளர் சகாயம் அன்பரசு.
கீழ்நிலை காவலர்கள் எந்த அளவுக்கு தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதற்கு சகாயம் அன்பரசு ஒரு உதாரணம். அதே போல இந்த துஷ்பிரயோகங்களுக்கு உயர் அதிகாரிகள் எப்படி உடந்தையாக இருக்கிறார்கள் என்பற்கு  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹெத்மனி ஒரு உதாரணம்.
ஆரம்பத்திலேயே தொலைபேசியில் அவரிடம், ” இது பொய்வழக்கு” என்று  சொன்னேன்.
ஆனால் அவரோ, “நிச்கசயமாக  இது பொய் வழக்கு கிடையாது. சிவானந்தத்தின் மீது காயங்கள் இருப்பது உண்மை” என்று கூறினார்.
ஆனால் தற்போது சிவானந்தத்தின் மீது காயங்கள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.  இப்போது எஸ்.பி., “மருத்துவர்கள் கொடுத்த பதிவேடு மூலமாகத்தான் அவர்கள் இருவரையும் கைது செய்து ரிமாண்ட் செய்தோம்” என்று பழியை ஆலங்குடி அரசு மருத்துவர்கள் மீது போடுகிறார்.
காவல்துறை நினைத்தால் எப்படி எல்லாம் பொய் வழக்கு தொடுத்து சாமானியர்களை அலைக்கழிக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம்.
சந்தோஷ் ஹெத்மனி
சந்தோஷ் ஹெத்மனி

எங்களது கோரிக்கை இதுதான்:
கறம்பக்குடி காவல்நிலைய ஆய்சவாளர்கா யம் அன்பரசும்  சார்பு ஆய்வாளர்  மெய்யப்பனும் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். இவர்கள் இருவர் மீதும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர்  சந்தோஷ் ஹெத்மனி மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கினை விசாரிப்பதற்கு ஐஜியை நியமிக்க வேண்டும்!” – இவ்வாறு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார் “எவிடன்ஸ்” கதிர்.