புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971 இன் அரசியலமைப்பு நம்பகத்தன்மையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

த இந்து குழுமத்தின் என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகிய மூவரும் சேர்ந்து, கருத்து சுதந்திரத்தை தடுப்பதாக கூறி அந்த சட்டப்பிரிவின் அரசியலமைப்பு நம்பகத்தன்மையை கேள்வியெழுப்பி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, முன்னதாக, நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்பாக விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வின் விசாரணைப் பட்டியலில் எதற்காக சேர்க்கப்படவில்லை என்ற காரணம் குறித்து விசாரிப்பதற்காக, உச்சநீதிமன்றத்தின் நிர்வாக தலைமை, மூத்த நிலை பதிவக உதவியாளர மற்றும் உதவி பதிவாளர் நிலையிலுள்ள அதிகாரிகள் ஆகியோரை அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வுதான், மனுதாரர்களின் ஒருவரான பிரஷாந்த் பூஷனுக்கு எதிரான அவதூறு வழக்கை விசாரித்து வருகிறது.

ஒரேவிதமான வழக்குகளை, அவற்றை விசாரிக்கும் அமர்வுக்கான பட்டியலில்தான் சேர்க்க வேண்டுமென்பது நீதிமன்ற வழக்கம் என்றும், ஆனால், நீதிமன்ற பதிவக அதிகாரிகள் இந்த வழக்கத்தை மீறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.